முகப்பு

Saturday 30 July 2011

நடந்தது என்ன..!? (காட்டானின் வாக்கு மூலம்)

 வாங்க அண்ணாத்த வாங்க எப்பிடி இருக்கிறீங்க... இவ்வளவு காலமும் முகம்தெரியாம என்னை கும்முனீங்க... இப்ப நேரில கும்முங்கோன்னுதாண்ண உங்கள இந்த கடைக்கு முன்னால வரச்சொன்னது.. 

அப்புறம் ஊர் புதினம் எப்புடி.. தேர்தல் முடிவு தெரிந்தோன லாச்சப்பல்ல இனிப்பெல்லாம் கொடுத்து கொண்டாடினிங்களாம்..  ஊருக்கு இப்ப போற எண்ணம் இல்லைப்போல தெரியுது ..

 ஏன் அண்ண உடம்ப இப்பிடி ஊத விட்டிட்டிங்க.. ஒழுங்கா டொக்டர் தந்த கொலஸ்ரோல் குளிசய போடுங்கோண்ண அக்கா சொல்லச் சொல்ல கேட்காம இப்பிடி இனிப்ப சாப்பிட்டா சலரோகம் ஏன் வராது கவனமண்ண லங்கா சிறீயில வார சங்கூதப்பட்டவங்க வயத பார்கேக்க பயமா இருக்கண்ண சின்ன சின்ன பொடியங்க எல்லாம் போறாங்க உங்கள பயப்படுத்திறத்துக்கு சொல்லல கவனமா இருங்கோன்னு சொல்லத்தான்ண...!!?

கிட்டடியில ஒரு விசயம் கேள்விப்பட்டேன் அண்ண எங்கட மணியண்ணையிண்ட மனிசி ரோட்டில போகேக்க ஒரு கறுவள் வந்து மடம் உங்களோட ஒருத்தர் கதைக்கோனுமாம்ன்னு டெலிபோன கொடுக்கிறானாம்..
இந்த மனிசியும் என்னத்துக்கு எதுக்குன்னு யோசிக்காம டெலிபோன வாங்கி கதைகிறாண்ண.. அங்கால ஒரு தமிழ் குரலண்ண அக்கா உங்களுக்கு பக்கத்தில நிக்கிற ஆபிரிக்ககாரங்க பொல்லாதவங்க.. மரியாதயா உங்களிட்ட இருக்கிற நகையெல்லாம் களட்டி கொடுத்துடுங்கன்னுறான்...

திரும்பிப்பார்த்தா பத்து பன்னிரெண்டு கறுவல் சுத்தி நிக்கிறாங்களாம்.. வேற என்ன செய்ய முடியுமண்ண இருக்கிற நகைகள கலட்டி கொடுத்திட்டு வீட்ட வந்திட்டாண்ண..மணியண்ண வீட்ட வர விசயத்த சொல்லி பொலிசுக்கு போய் வழக்கு போட்டுட்டு வந்திருக்கினம்..

 இல்ல நான் தெரியாமதான் கேக்குறன் அந்த மனிசியிட்ட டெலிபோன்ல கதைச்சது என்ன ஆபிரிக்ககாரனா..? அவன் எப்பயண்ண தமிழ் கதைச்சு பழகினாண்ண..!!?

அது மட்டுமேண்ண இப்ப இஞ்ச இருக்கிற தமிழர்கள் வீட்டிலதானேண்ண அதிகமா களவுபோகுது.. எங்கட சனமும் வாயகட்டி வயித்த கட்டி உழைச்ச காச நகையிலதானே போடுகினம் ஏன்னு கேட்டா பொம்புள பிள்ளை இருக்கு நாளைக்கு தேவை எண்டினம் அப்ப இங்க இருக்கிற ஆம்பிளைகளின் கழுத்திளையும் கையிலயும் தேடா கயிறு மாதிரி ஒண்டு இருக்கிதே அது எதுக்கண்ண... அவையும் பொம்புள பிள்ளதானோண்ண...

அட இவங்கதான் இப்பிடி சொல்லினம் ஆனா இஞ்ச பிறந்த பிள்ளைகளுக்கு பவுண்ல ஆசையில்ல... அவையெல்லாம் தாங்க போடுற உடுப்புக்கும் செருப்புக்கும் ஏற்ற மாதிரி பிளாஸ்டிக்கில செய்ததைத்தானேண்ண போடுனம்.. இவ எவ்வளத்த அடம்பிடிச்சாலும் அவங்க நகை போடுறத்துக்கு விரும்பினமில்லை.. இதுவும் நல்லதுதானே..!?

இப்பிடி களவப்பற்றி காட்டான் பேசுறான்னு நக்கலா சிரிக்காதீங்கண்ண.. காட்டான் இப்ப முந்தின மாதிரி இல்ல.. காட்டானும் இப்பிடி பாதிக்கப்பட்டதாலதான் சொல்லுறேன்..

இப்பிடித்தான் போனமாசம் வேல முடிச்சுப்போட்டு அரக்க பறக்க ஓடியந்து மெற்றோவ பிடிச்சு வீட்டுக்கு வார வழியில ஒரு பத்து பதினைந்து அடையாங்கள் நிக்கிறாங்க... அவங்கள் நிக்கிற நிலமைய பார்தோன காட்டானுக்கு விளங்கிப்போச்சு இண்டைக்கு ஏதோ நடக்கப்போவுதென்னு..

அதில ஒருத்தன் மிசு உங்களிட்ட சிக்கிரட்டு இருக்கோன்னான்.. மன்னிச்சுகோங்க காட்டான் சிக்கிரட்டு பத்திறதில்லைன்னு சொல்லிமுடிக்கேல்ல இன்னுமொருத்தன் வந்து காட்டாண்ட கோவனத்துக்குள்ள சிக்கிரட்டு பக்கற் இருக்கென்னு போட்டு கொடுத்திட்டான்..!?

அட அது வேறொன்னுமில்ல வேலை முடிச்சு வீட்டுக்கு வரும் வரை டெலிபோன இந்த கள்ளன்களுக்கு பயந்து கோவணத்துக்குள்ளதாண்ண வைச்சுக்கொண்டு வாறது.. அத பாத்துட்டுதான் இவனுங்க சிக்கிரட்டு பைக்கற்தான் இருக்கெண்டு நினைச்சு அத எடுடான்னு நின்னாங்க.. காட்டானும் கோவணத்த காப்பாத்தோனுமே..!? புதுசா வாங்கின ஐபோன காட்டினேன் அதவாங்கி வைச்சிக்கொண்டு... போடான்னு அனுப்பிவைச்சிட்டாங்கண்ணே...

இந்த வயசில இவ்வளவு பேரோட அடிபடவா முடியும்... கொக்குதடிய கமக்கட்டுக்குள்ள வைச்சிக்கொண்டு திருப்பி பாக்காம வீட்ட வந்து சேர்ந்தன்..! அடுத்தநாள்தாண்ண எனக்கு ஞாபகம் வந்திச்சு டெலிபோனுக்கு இன்சுரன்சு போட்டிருக்கிறது..!

ஏன் காட்டான் இன்சூரன்சு போட்டான்னு நீங்க யோசிக்கிறது எனக்கு விளங்குதண்ண... நானும் உந்த டெலிபோன வாங்கேக்க முதல்ல எனக்கு இன்சூரன்சு வேண்டாம்ன்னுதான் சொன்னனான்.. அதுக்கு டெலிபோன வித்த அந்த அழகான பொண்னு எனக்கு கிட்ட வந்து செல்லமா சொல்லிச்சு மிசு காட்டான் இந்த டெலிபோனு விலை அதிகம்... நாளைக்கு நீங்க தொலைச்சுப்போட்டால் புதுசா வாங்கிறதுக்கு  அதிகமா செலவு செய்வீங்க..

ஆனா மாதா மாதம் ஆறு யூரோ கட்டினீங்கன்னா எது வந்தாலும் உங்களுக்கு புது டெலிபோனு நாங்க தருவோமென்னா... காட்டானும் அந்த பிள்ளை கதைக்கிறத  ஜொல்லு விட்டபடி பார்த்ததை அந்த பிள்ள பார்திட்டு அதிலேயே முத்திரைய தடவி இன்சுரன்சு கொம்பனிக்கு கடிதத்தை அனுப்பி வைச்சுட்டாண்ண...  இப்ப அது காட்டானுக்கு வாச்சு போச்சு.. இதுதானப்பு ஜொல்லு விடுவதில் தவறு இல்லைன்னு காட்டான் அடிக்கடி சொல்லுறான்...!!??

புது டெலிபோன எடுக்கிறதெண்டால் போலீஸ் அறிக்கை வேண்டுமாம்.. அதுதான் இந்த பொலீஸ் அறிக்கைய கொண்டுபோய் டெலிபோன் வாங்கின கடையில கொடுத்திட்டு இந்த புது டெலிபோன வாங்கியாறன்..!

அட எனக்கு இதெல்லாம் கவலையில்லண்ண...!? அந்த அறிக்கைய தருவதுக்கு இந்த பொலீஸ் படுத்தினாங்களேபாடு அத இந்த காட்டானால தாங்க முடியலண்ண..!!??

 எதோ காட்டாண்ட அக்கா காட்டான் வைச்சிருக்கிற ஐபோன படத்தில பார்திட்ட மாதிரியும்,அதபோல தனக்கும் தேவையென்று கேட்ட மாதிரியும்,ஊருக்கு போன மணியண்ணையிட்ட தான் வைச்சிருந்த ஐபோன கொடுத்து விட்ட மாதிரியும்,அத எப்புடி போடுறதென்னு தெரியாம அக்கா காட்டானுட்ட அடிக்கடி டெலிபோனில கேக்குற மாதிரியுமல்லோ இருக்குது அந்த பொலீஸ்காரன் பார்வையும் பேச்சுமண்ண.. இது நல்லாவா இருக்கண்ண....!? காட்டான் திருந்தி ரெம்ப நாளாச்சு அண்ணாத்த....!!!!???

Thursday 21 July 2011

காட்டானும்.. கஞ்சனும்..!?


இப்ப கொஞ்ச நாளா தடல் புடலா கல்யாண நிகழ்சிகள்தான்...
ஆடி மாதம் வந்தா நல்ல காரியங்கள் செய்ய கூடாதென்று ஆனி மாசத்திலேயே எல்லாரும் மூன்று முடிச்ச போட்டுட்டாக இதில வேற ஐய்யர் கொடுக்கிற நல்ல நாலெல்லாம் சனி ஞாயிறுலதான் வருது அதுவுமில்லாம மதியம் கரைட்டா பன்னிரெண்டுல இருந்து ஒரு மணிவரைதான் நல்ல முகூர்த்தமாம்?

நானும் என்ர பெருச்சாலி வீட்ட அடிக்கடி போகேக்க அங்க இருக்கிற மெய்கண்டான் திருக்குறள் பஞ்சாங்கத்த விரிச்சு பார்பேன்..

எவ்வளவோ நல்ல நாட்கள் சனி ஞாயிர விட இன்னும் திறமான நாட்கள் எல்லாம் இருக்கும் அதெல்லாம் இவங்க கண்னுக்கு தட்டுப்படாது..

 இப்பிடிதான் நானும் ஒரு நாள் பஞ்சாங்கம் பார்கேக்க பெருச்சாலி வந்து காட்டான் பஞ்சாங்கத்த இப்பிடி பாக்கோனும்ன்னு நிமித்தி விட்டு போனார்..!

அட பஞ்சாங்கத்த நிமித்திதான் பார்கோனுமாம் ஆனா காட்டானுக்கு எந்த பக்கம் நிமிந்திருக்கு எந்த பக்கம் கவுண்டிருக்கென்று கண்டு பிடிக்கிறது கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் என்ன செய்யுறது..!

எனக்கு இப்ப கலியாணம் கட்டிறவைய பார்த்தால் வகுறு எரியுது பின்ன என்ன மாப்பிள பொம்புளைய காலையில ஏர்போட்டில இருந்து கூட்டிக்கொண்டு வரும் வரை ரூமில இருக்கிற பொடியங்களுக்கு சொல்ல மாட்டாங்க..!வீட்டுக்கு கீழ வந்ததும் டெலிபோன் கதரும் வீட்டில இருக்கிற பொடியங்களுக்கு..  மச்சான் என்ர வருங்கால மனிசி வந்திட்டாடா வீட்ட காலிபண்னுன்னு!?

அட மாப்புள நான் தெரியாமதாண்டா கேக்குறன் பிள்ள வர முந்தி இஞ்ச அவளுக்கு அக்கா இருக்கா ஆத்தா இருக்கா என்று இவன் விட்ட கதையெல்லாம் கேட்டம் இப்ப என்னடான்னா சுடுகுது மடிய பிடின்னு இந்த பச்ச பு(ல்)ள்ளங்கள இறக்கி விடுறீங்களே இவங்க எல்லாரையும் தாங்க காட்டான் என்ன சத்திரமா கட்டி வைச்சிருக்கான்..!?

வீட்டில கடைசிவரைக்கும் அவங்கள சமரி(ரூமில் வசிப்பதற்கும், சாப்பாட்டிற்கும் சேர்த்து கொடுக்கும் பணம்)வாங்கீற்று.. வீட்ட கடைசி ரயில பிடித்து ஓடி வந்தா..!சட்டிய வழித்து வைக்கிறீங்க அட நான் தெரியாமதான் கேட்கிறேன் கடைசி ரயில பிடித்து ஒருத்தன் அரக்க பரக்க ஓடி வாரான்னா அவனுக்கு அவ்வளவு வேலை இருக்குதுன்னுதானே அர்த்தம்.?அப்படி இருக்கிறவன் வேலை தலத்தில் சாப்பிட கூட நேரம் இருந்திருக்காது..  அட வீட்ட  வந்து சாப்பிடுவம்ன்னு வந்தா மீன்சட்டிய பூனை நக்குற மாதிரி நக்கி வைச்சிருக்கீங்க..?

அட இதுவாது பரவாயில்ல.. சில நேரம் வீட்ட பூட்டிவைச்சுட்டு திறப்ப கொடுக்காம சோம பாணத்த போட்டுட்டு சுறுண்டு படுக்கிறீங்க.. எப்பிடி கத்தினாலும் கேட்காது .. பக்கத்தி வீட்டு வெள்ளைக்காரன் பாத்துப்புட்டு பரிதாபபட்டு தன்ர வீட்டில இடம் தருகிறான் இரவு படுக்க.. அட அவன் பாவப்பட்டுத்தான் தங்கவிட்டான்னு பார்த்தா அவன் பார்வை ஒரு மாதிரி  இருக்கிறத பார்த்தபிறகு..!? இரவு எங்க நித்திரை வரப்போது..

இப்பிடித்தான் காட்டான் கொஞ்ச நாளுக்கு முன்னம் பழைய நன்பர் ஒருவர சந்திச்சான்.. இவர நன்பேண்டா என்று சொல்வதை விட ரயில் சிநேகம்ன்னு சொல்லலாம்  காட்டானோட எழு எட்டு வருடங்களுக்கு முன்னம் வேலைத்தலத்திற்கு போகும் வழியில் பழக்கம்.. நீண்ட நாட்களின் பின்னர் லாச்சப்பலில் கண்டவர் மச்சான் எப்பிடி இருக்கிறாய் என்று நலம்  விசாரித்தபடியே தான் ஒரு அலுவலா ஏர்போட் போகோனும் உன்ர மாட்டு  வண்டிய தாருவாயோ ஒருக்கான்னான்..?

இப்ப கொஞ்சகாலமா காட்டான் வண்டிய இரவல் கொடுப்பதில்லைன்னு சொன்னா  கேட்கிறானில்ல பிறகுதான் விசயத்துக்கு  வந்தான் மச்சான் ஒரு விசயம் சொல்லுறன் யாரிட்டையும் சொல்லிப்போடாத என்றபடியே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு என்ர வருங்கால   மனிசி வரபோறான்னான்.. அட எல்லாருக்கும்தானேடா மனிசி வாரது.. கலியாணம் கட்டுறது.. இதை ஏண்டா ரகசியமா வைத்திருக்கன்னா இல்ல மச்சான் உனக்கு ஒன்றும் விளங்காது.. நீ எதையுமே சீரியசா எடுக்கிறாயில்ல நான் நாளைக்கு ஏர்போட் போகோனும் வேனும்ன்னா நீ வண்டிய ஒட்டிவான்னான் இந்த டீல் காட்டானுக்கு பிடித்துக் கொண்டது ..

அடுத்த நாள் ஒன்பது மணிக்குதான் பொண்னு வருகுது .. இவன் காலை மூன்று மணிக்கே முப்பது தடவ டெலிபோன் அடிச்சிட்டான்.. இப்பிடிதான் புது மாப்பிளைகள்..!?

 எதோ ரெண்டு நிமிசம் லேட்டா போனா அவங்க இவங்களிடம் வரமாட்டன்னு சொன்ன மாதிரி அலக்க பறக்குறாங்க.. அட இவன் தொல்ல  ஒரு பக்கமெண்டா இஞ்சால மனிசி என்னப்பா அவந்தானே இவ்வளவு டெலிபோன் அடிச்சிட்டான் எழும்பி போனா என்ன குறைச்சோ போடுவியல்ன்னா இதுக்கு பிறகு வீட்டில நிக்க காட்டான் என்ன ........ ஆ!?

எட்டு மணிக்கே ஏர்போட் போய் சேர்தாச்சு மாப்பிள ஒரு கோப்பி கூட வாங்கித் தரல்ல திரையில இருக்குற விமான அறிவித்தல்கள பாக்குறார் நானும் உந்த திரைய இதுவரை எப்படி பாக்குறதெண்டு தெரியல மாப்பிளைய கேட்டா முழிக்கிறார் அப்பதான் அவருக்கு ஓடி விளங்கிச்சு சிலோன்ல ஒன்பது மணியண்டு சொல்லேக்க இவர் சரியா கேட்காம விட்டுட்டார்ன்னு அது பிரான்சுல இரவு ஒன்பது மணியாம் அது வரை இஞ்ச நிப்போமோன்கிறார் மாப்பிள..

பாருங்க அவசரபடுகிறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா..?  மச்சான் நீ நிக்கிறண்டா நில்லு நான் வீட்ட போட்டு வாரண்டான்னேன் சரி மச்சான் போட்டு வாடான்னான் .. அப்பதான் மாப்பிளைய உத்து பாத்தன் எனக்கு இவர தெரிஞ்ச ஆரம்ப நாட்கள்ல மாப்பிள முழு மொட்டையடித்துதான் வருவார் நானும் பார்த்தன் இப்ப இதுதானே இஸ்டையில்ன்னு விட்டுட்டன் இப்ப பார்த்தா வயல்ல மாடுமேயாத அறுகுபோல தலை முடி இருக்கு...????? சரியப்பு நடத்து நடத்துன்னு மனசுக்க சொல்லிக்கொண்டே வீட்ட வந்து சேர்ந்தேன்...

அட இரவு போய் பொண்னை கூட்டி வந்து விட்டா வீட்டுக்கு கீழ ரெண்டு பொடியங்கள் நிக்கிறானுங்க சூக்கேசோட அப்பதான் இவன் சொல்லுறான் மச்சான் வீட்டில இடமில்லை.. கொஞ்ச நாள்ல ஒரு வீடு வாங்கப்போறன் அதுவரை இவங்களை நீயே வைச்சிருடா மச்சான்னுறான்..!

நானும் அந்த இடத்தில புது பொண்னுக்கு முன்னால ஏன் தேவையிலாம கதைத்து பிள்ளைய வெருட்டுவான்னு பொடியங்கள கூட்டிக்கொண்டு மாட்டு வண்டிய எடுக்கும் போதுதான் பொண்டாட்டி முகம் ஞாபகத்தில வந்திச்சு..!?

இவங்கள வீட்ட கூட்டிப்போய் என்னுடைய இமேச்ச ஏன் கெடுப்பான் என்று என்ர மச்சானுக்கு ஒரு டெலிபோன போட்டன் அவன் ஏற்கனவே வீட்டில பத்து பேர வைச்சிருக்கான் ..

 நானும் ஒன்றும் செய்ய முடியாத நிலமை அவனோ காசுப்பேய்..!
டெலிபோன எடுத்தவன் என்ன மச்சான் இதுக்குபோய் என்னட்ட கேட்டுகிட்டு கொண்டு வந்து கொட்டிவிடு..!!?? என்று சொல்லும்போதே தெரியுது அவனைப்பற்றி வீட்ட கூட்டிக்கொண்டு போனா பணங்கிழங்கு அடிக்கி வைச்ச மாதிரி கிடக்குறாங்க பொடியங்கள்.. இவங்களையும் அங்க விட்டுட்டு வீட்ட வந்தா சாப்பாடும் ஏறல நித்திரையும் வரல அந்த பொடியங்க மூஞ்சிதான் கண்ணு முன்னால..

ஒரு ஆறு மாதம் இப்படியே போச்சு நான் மச்சான் வீட்டில விட்ட பொடியங்க இப்ப ஊர் அடியுண்டுட்டாங்க பின்ன பத்து பொடியங்களோட இருந்தா ..!?அதில ஒருத்தனை லாச்சப்பல்ல கண்டேன் அண்ணே உங்கட நம்பர் ஒருக்கா தாங்கோண்ண  உங்கட பழைய பிறண்டு கேட்டவர் கல்யாண வீட்டுக்கு சொல்லுறத்துக்குன்னான்..!

வீட்ட வந்து மனிசிட்ட சொன்னன் ஆறு மாதமா ஒன்னா இருந்தவைய ஐய்யர் நாள் பார்த்து கொடுத்திருக்கார் கலியாண வீட்டிற்குன்னேன்.. உங்களுக்கு உதுதான் வேலையாபோச்சு..?  ஏன் அவங்க மனகட்டுப்பாட்டோட இருந்திருப்பாங்க உங்கள மாதிரி எல்லோரையும் எட போடாதீங்கன்னாள் இதுக்கு பிறகு காட்டான் கதைப்பானா..!?

ஒரு நாள் வீட்ட வந்து திருமணபத்திரிகையும் வைச்சான் மாப்பிள
மச்சான் கட்டாயம் கலியாண வீட்ட வர வேண்டும் கல்யாணம் ஒரு ஞாயிற்று கிழமைன்னான்(அது தானே பார்தேன்..?)

இப்ப கொஞ்ச காலமா ஒரு முடிவுக்கு வந்திருக்கோம் நானும் மனிசியும்.. தமிழர்கள் யார் எந்த நிகழ்சிக்கு அழைத்தாலும் அவர்கள் சொல்லும் நேரத்தில் இருந்து இரண்டு மணித்தியாலங்கள் பிந்தி செல்வதென்று..!

ஆமாயா இப்படித்தான் பல விழாக்களுக்கு முத ஆளா போனா அப்பதான் மண்டபத்திற்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்கும்.. விழா முடிந்து சாப்பாடு வர பின்னேரம் மூன்று மணியாகிடும் சிறுவர்கள் பசியால் துடிப்பார்கள் என்று இதுவரை எந்த விழாக்காரர்களும் நினைத்ததில்லை ..!? பஞ்சுவாலிட்டி அப்படி இருக்கிறது எம்மிடம்..

இதில வேற என்ர மனிசி ஒரு கல்யாணத்துக்கு போட்ட சாரிய இன்னுமொன்றுக்கு போட மாட்டாவாம் வீடியோவ பாக்கிறவ இவளிடம் வேற சாரி இல்லையோன்னு ..!? சொல்லுவார்களாம்  இஞ்ச  இப்ப ஒரு கல்யாணத்துக்கு போறதெண்டால் தலை சுத்துது காட்டானுக்கு..

 இதில வேற கல்யாண மண்டபத்துக்கு போய்பார்த்தா ஏதோ வட இந்திய திருமணத்திற்கு வந்து விட்டேனோன்னு சந்தேகமாய் இருக்கு..? காட்டான போல கோவணத்தோட ஊரில நிண்ட மணியண்ணை குர்தாவோ கிர்தாவோன்னு ஒண்டோட நின்று வாடா காட்டான் வாடன்னுறார்..

இல்ல நான் தெரியாமதான் கேக்கிறன் பிரான்சில இருக்கிறாய் இவங்கள மாதிரி போட்டா ஒத்துக்கொள்ளலாம் இல்லாட்டி வேட்டி சட்டையோட நின்னாலும் பரவயில அதென்னப்பு பொம்பளயள் போடுற பஞ்சாவியமாதிரி ஒன்ன போட்டுக்கொண்டு தலையில போடுற துவாய கழுத்தில சுத்திக்கொண்டு கண்றாவியா இருக்கையா கோவணத்தோட உங்கள பார்த்த எனக்கு..!

அட கல்யாணமும் முடிஞ்சு வீட்ட வர ஆறுமணியாச்சு அஞ்சு மணிக்கு மத்தியாண சாப்பாட்ட சாப்பிட்ட எங்களுக்கு இனி இரவுச்சாப்பாடு எதுக்கெண்டு அப்பிடியே செற்றியில சாஞ்சா..

இரவு டெலிபோன் வருகுது புது மாப்பிளயிட்ட இருந்து என்னடா இப்ப முக்கியமான இடத்தில இருக்க வேண்டியவன் ஏந்தான் டெலிபோன் அடிக்கிறானோன்னு பயந்து எடுத்தா டேய்காட்டான்..!? உனக்கு வெக்கம் மான ரோசம் இருக்கோடான்னு கேக்கிறான் நானும் ஒரு நிமிசம் பயந்திட்டன் யாராவது காட்டான அந்த பிள்ளையோட தொடர்பு படுத்தி புது மாப்பிளைக்கு தூபம் போட்டுட்டாங்களோன்னு..!

அதுக்கு பிறகுதான் சொல்லுறான்.. நான் உன்ர மகன் பிறந்த நாளுக்கு எத்தனை காசு தந்தனான் தெரியுமோடான்னான்..!?அட உனக்கு அதவிட முக்கியமான வேலையிருக்கடா போய் அத பாருடான்னா கேட்கிறானா..!

கொஞ்ச நேரத்திலேயே மச்சான் என்ற வார்த்தை டேயாக மாறியது..! இதை கேட்டுக்கொண்டிருந்த மனிசி இஞ்ச தாங்கோ நான் கதைக்கிறேன்னு வாங்கினாள் டெலிபோனை..  அப்பவே புரிஞ்சு போச்சு..!? மாப்பிளைக்கு ஒரு இத்த கயிறு கிடைக்கப்போகிறதென்று.. இஞ்ச வாங்கோ இன்றுதான் உங்கள் திருமணநாள்..ஏன் தேவையில்லாத பிரச்சனைக்கு வாரீங்க..   நானும் நீங்க கதைச்சத கேட்டுக்கொண்டு இருந்தனான் நீங்க சொல்லுறபடி பார்த்தாலும் நீங்கதான் எங்களுக்கு காசு தரவேண்டும்..!?

அட நீங்க எங்கட மகன் பிறந்த நாளுக்கு எழுவது யூரோ தந்தத இல்லைன்னு சொல்லல.. நாங்க உங்கட கலியாணத்திற்கு  ஐம்பது யூரோ தந்தனாங்க மிச்சம் இன்னும் இருவது யூரோ இருக்கு நாங்க உங்களுக்குதர..!

ஆனா நானும் ஒரு கணக்கு போட்டு பார்தேன் இவர் வண்டிய ஏர்போட்டுக்கு கொண்டு வந்தது அத அங்க நிப்பாட்டினதுக்கு கூலி இதெல்லாம் ஒரு ஐம்பது யூரோ வருகுது ..!? நாளைக்கு இவர் வருவார் அத நீங்க உடனே குடுக்கிறீங்க .. இல்லாட்டா தெரியும்தானே காட்டானப்பற்றின்னே டெலிபோன கட் பன்னினாள்..!?

என்ர பக்கம் திரும்பி என்னங்க இப்பிடியான கசவாரங்களிட்ட நீங்க  இனி சிநேகிதம் வைச்சா..!? பிரன்சு சட்டம் தெரியும்தானேன்னாள்..!?  அப்பிடியே போய் அந்த கசவாரத்திட்ட காச வாங்கி ஊரில கோமதியக்கா ரெண்டு பிள்ளையோட கஸ்டப்படுகிரா அவாக்கு அனுப்பிட்டு வாங்கோன்னாள்..

அதுதான் இந்த ரெயில பிடிச்சு பரிசுக்கு போறன்.. அவனிட்ட காச வாங்கி ஊருக்கு அனுப்ப..!?

 அப்பதான் யோசிச்சன் இவனுங்க எல்லாம் காசு காசென்னு எப்படி சாகுறாங்கன்னு காட்டான் இப்ப பணகஸ்ரத்தில இருக்கான் யார் கல்யாணத்துக்கு கூப்பிட்டாலும் அதிகமா ஐம்பது யூரோவிற்கு மேல் போடுவதில்லை..


அட ஒண்ட மறந்திட்டேனே அவனும் ஒரு கணக்கோடதான் வந்தான்னா.!?காட்டாண்ட குடும்பம் கல்யாண வீட்டில சாப்பிட்ட கணக்குன்னு..

 ஐயோ வயுத்த கலக்குது இஞ்ச இருக்கிற சனங்கள நினைத்தா..? இந்த ஸ்டேசன்ல எங்கய்யா கக்கூசு இருக்குது ...!?

Thursday 14 July 2011

கோழி.. கொண்டக் கோழி..!


எரியாட்டி ஒன்றும் எரியாது எரிய வெளிக்கிட்டா தூமசீலையும் சேர்ந்து எரியுமாம்..இப்பூடி என்ற ஆச்சி அடிக்கடி சொல்லுவா இதுக்கெல்லாம் விளக்கம் என்னன்னு அப்ப தெரியாது.. ஆனா கடைசியா கோழி அடிச்சு சாப்பாடு தந்து பிரான்சுக்கு என்ன வழியனுப்பேக்க ஆச்சி சொன்ன வார்த்தைகள் இது..!! எல்லாரும் தன்னை விட்டு பிரிந்து செல்கிறார்களே என்ற விரக்தியில் சொல்லியிருக்கலாம் தூமசீலை என்றாள் கோவணம்ன்னு மட்டும் எனக்கு தெரியும்..!!? ஆச்சியின் வாயில அடிக்கடி பழமொழிகள் அவுட்டு விட்ட நெல்லிக்காய் மூட்டை போல் வந்து விழும்..

இப்ப நீங்க புலக்கு புலக்கென்று அலையிரதால ஆச்சிய அடிக்கடி நினைக்கிறீங்க.. என்னையும் பிள்ளைகளை மறந்துபோறீங்க என்கிறாள் சினுங்கிக்கொண்டே என்ர மனிசி ஆச்சிய பற்றி யார் தவறா கதைத்தாலும் எனக்கு கெட்ட கோவம்தான் வருகிறது அதுவும் என்ற மனிசிய கோழி அமுக்கிற மாதிரி அமுக்கித்தானே ஆச்சி கூட்டியந்தவா இந்த காட்டானுக்காக..!! அதனால ஆச்சிமேல இவளுக்கு ஒரு இனம்புரியாத ஒரு கடுப்பிருக்கிறது..!!?


இதுக்கு மேல கதைத்து தும்புக்கட்டைய ஏன் உடைய வைப்பான்னு காட்டானும் இடத்தை காலி பண்னிட்டான்..! இப்பவெல்லாம் காட்டான் பிரச்சனை முத்தபோகுதென்றா இடத்தை காலி பண்னிடுவான் வர வர காட்டானின் உடம்பில் தாங்கும் சக்தி குறைந்ததுகொண்டு வருகிறது..!?


கோழி என்று சொல்லேக்க எனக்கு அக்கா ஞாபகம்தான் வருது.. நம்ம கிராமத்து வீட்டில கோழி வளக்கிறதெல்லாம் அக்காதான் ஆனா அக்கா கோழிக்கறி சாப்பிட மாட்டா... முட்டையெண்டா வெளுத்து வாங்குவா எங்களுக்கு கோழி சமைத்தால் அக்காவிற்கு இரண்டு முட்டைகள் கட்டாயம் அவித்து வைப்பார்கள்..

அக்காவிற்கு கோழிய அப்புச்சிதான் தவறனையில வாரவங்களோட கதைத்து மலிவா வாங்கி வந்து கொடுப்பார்.. தனிமரம் அடிக்கடி சொல்லுவாரே சகோதர மொழி சகோதர மொழியெண்டு அத பேசுறவங்கதான் அப்புச்சியிண்ட கைய முறிச்சு நீ வீட்டோட மாப்பிளையா போன்னு அனுப்பி வைச்சாங்களாம் இது நான் பிறக்க முன்னம் நடந்த கலவரம்..!?அப்புச்சி அடிக்கடி சொல்லுவார் கைய தடவியபடியே..  ஆனா அப்புச்சி ஒற்ற கையாலேயே சுருட்ட சுத்துரதென்ன மம்பட்டிய பிடிக்குறதென்னன்னு எல்லா வேலையும் செய்வார்..

வீட்டில கோழி சமைக்கிறது வலுகுறைவு ஒன்றில் கோழிக்கு வருத்தம் வந்து ஒரு கோழி சாகோனும்..!? இல்லாட்டி தீபாவளி வரனும் அதுவும் இல்லேன்னா நெருங்கிய சொந்தங்கள் கல்யாணம் செய்து விருந்திற்கு அவர்களை கூப்பிட வேண்டும்..?

என்ன இருந்தாலும் சமைக்க கோழிய பிடித்தா அக்காவிற்கு வைச்சது வைச்சபடி ஐம்பது ரூவா கொடுக்கோனும் நானும் உந்தகாச ஆட்டைய போட தேடி களைத்துபோனதுதான் மிச்சம் இண்டைக்கு வரை அந்த காச எங்க வைத்திருந்தாலெண்டு நான் கண்டு பிடிக்கவில்ல காட்டாண்ட தொழில்ல நேர்ந்த பெரிய அவமானம் அதுதான்....!!?

அப்புச்சி 1,2, மாதகுஞ்சுகளா கொண்டு வந்து கொடுக்கேக்க அக்கா மூஞ்சிய பாக்கோனும்..!! ஓடிபோய் கயிறு கொண்டு வந்து குஞ்சுகள கட்டிவைப்பாள் இரண்டு மூன்று நாளைக்கு... அதுக்கு பிறகு குங்சுகள பிடித்து முதலில் அவற்றுக்கு அடுப்படிய காட்டி காட்ட போய் வீட்ட வா..??  காட்ட போய் வீட்ட வா..?? என்றபடியே வீட்டையும் சுத்தி காட்டுவா ஆமாய்யா அப்பதான் அதுகளுக்கு வீடு பழக்கமாகுமாம்..?

இத எல்லாம் நாங்க பார்துகொண்டிருப்போம் இன்னும் எவ்வளவு நாள்ள தீபாவளி வருதெண்டு யோசித்தபடியே...! வாங்கி வந்த கோழிகளில் சேவல்கள் அதிகமானால் கோவில் திருவிழா முடிந்தவுடன் அவற்றிக்கு சங்குதான்..!!

வளர்ந்த சேவல்களை பிடிப்பதே ஒரு கலை இரவில் வேப்ப மரத்தில் தூங்கும்போது வெளிச்சத்த கண்னுக்கடித்து பிடிக்கோனும் இதில பிசகினா  காலையில காட்டான் சேவலுக்கு பின்னால் ஒடுவத வைத்தே இண்டைக்கு வீட்டில என்ன கறியெண்டு கண்டு பிடித்துவிடுவார்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள்..

ஆனா ஆச்சி இருந்தபடியே சேவலை பிடிப்பா.. கொஞ்ச அரிசிய வாசல்ல இருந்து வீட்டு அறைவரை போடுவா கோழிகள் அவற்றை தின்றபடியே அறைக்குள் நுழைவினம் மெல்ல கதவை சாத்தியபடியே காட்டான் இஞ்ச ஓடிவாடான்னா கறிச்சேவல் காட்டான் கையில..! பிறகென்ன பின்வளவில இருக்கிற பூவரச மரத்துக்கு கீழ கிடங்க வெட்டுறதுதான்.. (தனிமரம் இப்ப தெரியுதா பூவரசம் பூவ கோயிலுக்கு ஏன் எடுப்பதில்லைன்னு..!?) மேல்கொப்பில தூக்குகயிறு ரெடியாக்கினா.. ஆச்சி வருவா கோழியின் கால்களை ஒரு கையாலும் செட்டைகளை மறு கையாலும் பிடித்தபடியே  காட்டான் ரெடியாவான் கோழியுரிக்க..! கோழியோட வந்த ஆச்சி பக்கத்தில உள்ள பனைமரத்த பார்பா...!!? இஞ்ச காட்டான் கட் பண்னுறான் கொலைக்காட்சிகளை சென்சார் அனுமதிக்காதாம் ..?

 பிரான்ஸ் வந்து சப்பிட்ட கோழியெல்லாம் பல்லில்லாதவங்களுக்குகாக வளர்கிறாங்களோ என்று என்னை சதேகபடவைக்கிதுது ஆமாய்யா கோழி இறைச்சியெண்டா புளியங்கொட்ட சப்புற மாதிரி இருக்கோனும்...!

இப்பிடியே போனா காட்டானின் நாக்கு செத்துடும்ன்னு காட்டானுக்கு பயம் வந்திட்டு அப்பதான் காட்டானுக்கு பழம் பெரும் பெருச்சாலி  ஒன்று அறிமுகமாச்சு இஞ்சேயும் ஊர்கோழி இருக்கடா என்னட்ட மாட்டு வண்டியில்லேடா  நீ வண்டிய கொண்டு வந்தா நான் அந்த இடத்த காட்டுறேண்டான்னு பேரம் பேசியது ...!?
காட்டானுக்கு சொர்கமே திரும்பி வந்த மாதிரிபோச்சு...!! அண்டைக்கு காட்டான் தொடங்கினான் வேட்டய இன்று வரை நிக்கவில்லை .. காட்டானுக்கு அங்க போறதெண்டா ஒரு சுகம் வாருங்கோ எங்கட ஊர் வயல் வெளிகள் மாதிரியிருக்கு உத கடந்துதான் காட்டான் போவான்..!

 ஏன் என்ர மாப்பிளைகளுக்காக அந்த இடங்கள காட்டக்கூடாது..!? என்று ஒரு ஆசை வந்ததன் வினை வாருங்கோ என்னோடு இதுதான் காட்டான் போற பாதை ... இதுதான் காட்டான் பிடித்த கோழி.. இவர்தான் கோழிய நிறுக்கிறவர்....கோழி விலை கிலோ மூன்று யூரோ இந்த கோழி நாலு கிலோ இந்த மிசின் பக்கத்தில நிக்கிறாரே இவர்தான் முதலாலி என்ர பத்து வருட நண்பேண்டா...?

இந்த மிசினில சுடுதண்ணி கொதிக்குது இஞ்ச கரண்டுல ஒரு சின்ன மிசினிருக்கு ...ஆச்சி பனையில செய்கிற வேலைய இந்த பட்டன்னு செய்யும் அதுக்கு பிறகு இந்த  சுடுதண்ணிக்குள்ளார கொஞ்ச நேரம் விட்டுட்டு பக்கத்தில உள்ள மிசினில விட்டா செட்டைய எடுத்து தரும்

ஆனா காட்டான் சுடு தண்ணிக்க போட விடமாட்டான் ..!? வேட்டிய மடிச்சு கட்டிற்று வேலைய தொடங்கினான்னா பத்து நிமிசத்தில முடிச்சிடுவான் வேலைய என்ன மாபிளங்கா காட்டான் எப்பிடி கோழிய உரிச்சான்னு பாக்கபோறீங்களா உந்த வேலை நம்மட்ட வேகாது பாரீஸ் பொலிசில கம்பி எண்ண காட்டான் என்ன ......!?ஆ

ஊரில ஒரு சொல்வட இருக்கு அவள தொடுவானேன்.. கவலைப்படுவானேன்னு..? அதபோல உங்களுக்கு கோழி உரிப்ப காட்டுறன்னு .. கோழிய வாங்கிட்டான் இந்த காட்டான்..! இத வீட்டில கொண்டுபோனா மனிசி சொல்லும் நீயே கறி குழம்ப வையன்னு சரி மாப்பிளங்கா.. வந்தது வந்திட்டீங்க கறி எப்படி இருக்கென்று பாத்திட்டு போங்க..!!?

காட்டான் கறிய எப்பவும் இரண்டா பிரிச்சுத்தான் வைப்பான் கோழி தசைகள வார்ந்து எடுத்து ஒருக கறியாக தண்ணீர் விடாது சமைப்பான்...!(இது சைட் டிஸ்சுக்கு மிகவும் ஏற்றது..!'?)

அடுத்தது எலுப்புகள போட்டு தண்ணீர் சேர்த்து குளம்பா வைப்பான்... இது இரவு சாப்பாட்டுக்கு அதாவது புட்டு அல்லது இடியப்பத்திற்கு நல்லது  இத எப்படி சமைக்கிறதென்று கேட்கிறீங்களா ...!?மாப்பிளங்கா ஒரு ஆண் சமைக்க தெரியாதெண்டா எப்படியப்பு நீங்கள்லாம் இந்த காலத்தில கன்னாலம் கட்டி குடும்பம் நடத்த போறீங்க ஓடிப்போய் சமையல பற்றி அப்பாவிடம் கேட்டுக்கொண்டு வாங்க....!!!?

Saturday 9 July 2011

காட்டான் பிடித்த கிளி..

காட்டான் பாரீஸ் வந்து விட்ட கொஞ்ச காலத்தின் பின் தான் வைத்திருந்த திருக்க வண்டியை ஆச்சி வித்திட்டா என்று கேள்விபட்டவுடன் உண்ணாவிரதமிருக்க தொடங்கிவிட்டான்..? ஆனால்  வாழ்கை முழுவதும் மூக்கு முட்ட ஊர் அரிசிசோத்த சாப்பிட்டவனுக்கு இதில வேற அவண்ட நாய்கும் அதே அளவு வைக்க வேண்டும் இல்லாவிட்டால் வீடே சுனாமி வந்த புக்குசிமா மாதிரியாகிவிடும்..அதனால்
காலையில் தொடங்கிய உண்ணாவிரதத்த மாலையே முடித்துவைத்தான் ..!

காட்டான் பசி தாங்க மாட்டான் இப்ப நினைத்து பார்த்தால் தழிழ் ஈனத்தலைவர்(எழுத்து பிழை இருந்தா மன்னிச்சிடுங்க உங்களுக்கு தெரியும்தானே காட்டானின் கல்வியறிவு..!) இருந்த உண்ணா விரதத்தை விட கூட நேரம் இருந்திருக்கிறான்...!!?

அப்புறமா ஆச்சி டெலிபோன்ல சொன்னா  அட காட்டானே அத நான் வித்தது கந்தயர் வீட்டுக்குதான் அங்க ஒரு அழகான கிளி இருக்கடா எதிர் காலத்தில அந்த கிளிய உன்ர கையில பிடிச்சு கொடுக்கலாமெண்டு யோசிக்கிறன்..? அப்ப நீ வீட்டோட மாப்பிளயாய் இருக்கேக்க அந்த திருக்க வண்டி உதவும்டா..நீ கவலையை விட்டுட்டு வேலையை பாரடான்னா..

அதுக்கு பிறகு காட்டானுக்கு எங்க வேல ஓடபோது..!காட்டானுக்கும் அந்த கிளிய நல்லா தெரியும் அட அந்த கிளி காட்டாண்ட தங்கச்சியோடதான் படித்தது ஆனா ஊரில காட்டானை கண்டா..!!?

மாப்பிளங்களா அது வேற ஒன்னுமில்ல அவ அப்பண்ட தோட்டத்தில வெள்ளரிக்காய்கள் களவு போகுதாம்.. இதில காட்டான் சம்பந்தபட்டிருக்கலாமென யாரோ ஒரு நல்லவாயன் போட்டு கொடுத்திட்டான் இதுக்கெல்லாம் நாங்க என்ன மறுப்பறிக்கையா கொடுக்க முடியும்??இல்ல அந்த அறிக்கையை எழுதவாவுதல் காட்டானுக்கு தெரியுமா..?

இப்ப ஆச்சி திருக்கையை அட்வான்சா கொடுத்து காட்டான்மேல் இருக்கும் காட்டத்த குறைச்சு கிளிமேல கண்ண வைச்சிட்டா என்றவுடனேயே காட்டாண்ட பின் பக்கமெல்லாம் லா..லா என்று வெள்ள உடுப்பில பறக்கினம் தேவதைகள் ...!!

என்றாலும் காட்டானுக்கு ஒரு சந்தேகம் அந்த கிளி யாழ்பாணத்தில பெரிய படிப்பெல்லாம் படிக்க போகுதாமே என்றேன்  ஆச்சியிடம் அட காட்டுப்பயலே உனக்கென்னடா குறைச்சல்.!? நீயும் பெரிய பெரிய காரெல்லாம் வைச்சு ஓடுரேயே அவங்கதான் காட்டானின் குடும்பத்தில வர்றத்துக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமெண்டா அப்பதான் காட்டானுக்கு ஓடி விளங்கிச்சு..!!ஆச்சி படமனுப்பு என்று அடிக்கடி கேட்கேக்க காட்டான் புறாகூடு வீட்டில படமெடுத்து அனுப்பினா ஆச்சி கவலைப்படும்ன்னு ரோட்டில் பாக்கிங்பண்னி இருக்கும் ஒவ்வொரு காருக்கும் முன்னால நின்னு படமெடுத்து அனுப்பியது..!

என்றாலும் காட்டானின் மனசுக்க பிரான்சுக்கு வந்ததில ஒரு லாபம்..?பெரிய படிப்பு படிக்கும் பொண்டாட்டி கிடைக்கப்போறாள் அதுக்கு காட்டான் தன்னை தயார்படுத்த தொடங்கினான்..!?

அதன் முதல் படி ஆச்சி நம்பிக்கொண்டு இருப்பதுபோல் நானும் கார் வாங்கினால் என்ன..?மாட்டு வண்டியிலேயே காலத்தை கழித்தவனுக்கு கார் கனவு நடு இருட்டில துரத்துர நாயப்போல துரத்த தொடங்கியது..!?

அப்பதான் காட்டானுக்கு ஒரு உண்மை விளங்கியது பிரான்சில கார் வாங்குறது ஒன்றும் பெரிய விசயமில்ல ஊரில பல்லி முட்டா வாங்கிறமாதிரி வாங்கலாம் ஆனா அத ஓட்ட லைசன்சு வேனுமாம்..!அட இந்த காட்டான் மாட்டு வண்டி ஓட்டும்போது ஒரு கம்புதான் வைத்திருப்பான் வேற ஒன்றுமே தேவையில்ல..  இப்ப லைசன்சு வாங்கோனும்னா பள்ளிக்கூடம் போகவேனும்ன்னுட்டாங்க இஞ்சதான் காட்டானுக்கு வகுத்த கலக்கதொடங்கியது சின்ன வயசில பள்ளிக்கூடம் போவென்றாவே காச்சட்டையை நனைக்கிற காட்டான் ஒரு கிளிக்காக பள்ளிகூடம் விரும்பி போக தொடங்கினான்..!!

அடிப்படையிலேயே இங்கிலீசு தெரியாத காட்டான் பிரன்சை பக்கென்று பிடித்ததற்கு காரணம் வேலைத்தலத்தில் எல்லோருமே பிரன்சுக்காரர்கள் அத்தோட நாலைஞ்சு பொண்ன்னுங்க வேற அவங்க எதைப்பற்றி கதைத்தாலும் காட்டானிக்கு தன்னைப்பற்றிதானோ கதைக்கிறார்கள் என்று யோசிப்பான் அதனால காட்டான் பிரன்சை மெல்ல மெல்ல அவர்களுடன் கதைத்து பழகிற்றான் காட்டான் அடிப்படையிலேயே வெக்கப்படமாட்டான் அதுவும் அவனுக்கு கை கொடுத்தது ..!

என்றாலும் பள்ளிகூடத்தில சொல்லி தருகிறது விளங்குவது கஸ்ரமாகத்தான் இருந்தது அப்பதான் இந்த வாத்திமார்களின் சைக்கில் காத்த புடிங்கி விட்டதெல்லாம் தேவையில்லாமல் ஞாபகபடுத்திசென்றன..!?

என்றாலும் காட்டானா கொக்கா எழுத்து தேர்வு நடந்த கோலில் நின்று எல்லோரையும் நோட்டம் விட்டான் இலுப்பகட வைரவரை நினைத்துக்கொண்டு  ஒரு சைனீஸ் பெண்னுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்..!?தேர்வும் முடிந்தது நாற்பது கேள்விகளுக்கு முப்பதொன்பது சரியாக செய்து விட்டான் இந்த காட்டான் சந்தோசத்தில் அந்த பெண்னை திரும்பி பார்த்தான் ஒரு வித நன்றியுணர்வோடு ஆனால் இந்த காட்டானுக்கு இன்றும் விளங்கவில்லை ஏன் அந்த பெண் தேர்வில் தோற்றாள் என்று..!!

அடுத்த தேர்வு காரை ஓட்டி காட்டுவது ஏனோ தெரியவில்லை காட்டான் இதில சுலபமாக வென்று விட்டான்..!??அப்புறமென்ன ஊரில சங்க கட கூப்பன் காட் போல ஒன்றை தந்து இதுதான் உன்ர லைசன் இனி நீ கார் ஓடலாமென அனுப்பி வைத்தார்கள்..

  அடுத்து கார் வாங்கும் படலம் ஒரு பழைய R19 காரையும் வாங்கிவிட்டேன் அதன் முன்னால நின்று ஒரு படத்த எடுத்து ஆச்சிக்கு அனுப்பினா அங்க இருந்து அச்சி சொல்கிறா என்னடா இந்த காட்டானுக்கு என்ன கிறுக்கு பிடிச்சிடிச்சோ? நல்ல நல்ல காரெல்லாம் வைச்சிருந்தான் இப்ப என்னடான்னா பேரீசம் பழத்திற்குகூட பெறுமதியில்லாத கார் வாங்கியிக்கிறான்னா..!!

ஆனா பாருங்கோ ஆச்சி கிளிய பிடிச்சு பிரான்சுக்கு அனுப்பும்வரை அந்த படத்த கண்னுல காட்டல்ல கிளிக்கு..!? இப்பதான் யோசிக்கிறன் கிளி படத்த பார்த்திருந்தா ஏர்போட்டிலேயே யோசித்து பார்த்து பறந்திருக்கும்..?இப்ப பாருங்கோ இந்தகாட்டானோட இன்னும் ரெண்டு காட்டான் குட்டிகளை பெத்துபோட்டு....விட்டு சொல்லுறாள் இஞ்ச பாருங்கோ இரவுசாப்பாட்டிற்கு இடியப்பத்த அவிச்சு வையுங்கோ நானும் லைசன்சுக்கு படிக்க பள்ளிகூடம் போட்டு வாரேன்கிறாள்..! ஆச்சிய நினைச்சிகொண்டு இரவுச்சாப்பாட்ட ரெடி பண்னபோறேன்..அது சரி கறி என்ன வைக்கிறதெண்டு சொல்லாம போட்டாளே.. மாப்பிளைங்களா இண்டைக்கு நான் அடிவாங்காம படுக்கபோறதில்லைன்னு தெரியுது எப்புடி இருந்த நான்.!!!?

Wednesday 6 July 2011

ஆசை நூறுவகை...!!??

நீண்ட நாள் எனக்கு ஒரு ஆசை பாரீசின் புகழ் பெற்ற தமிழ் கடை வீதியில் அந்த ஆசையை நிறை வேற்றுவதற்காக காத்திருந்தேன்..

ஆடி மாத சம்பளமும் ஆடியசைந்து என் கைக்கு வர புறப்படி  விஸ்வமடுவிற்கு என்ற மாதிரி (அதை விட கொஞ்சம் பணிவாக..!?)மனைவியிடம் கூறி விட்டு  பிள்ளைகளை தயார் படுத்தினேன் அட ஆமாயா உந்த வேலையெல்லாம் நான் தான் செய்ய வேண்டியிருக்கு..

என்னுடய  மனைவி இதை செய்ய சென்றால் பொடியங்கள் அனுமதிப்பதில்லை கேட்டால் இவங்கள் குட்டி காட்டான்கள் அப்பா செல்லம் என்கிறாள் இதுவும் ஒரு யுக்திதானப்பு..! அப்புறம் வண்டியை எடுத்துக்கொண்டு பாரீஸ் வந்து சேர்ந்தேன் அட என்ர மாட்டு வண்டிக்கே பாரீசில் மணித்தியாலத்திற்கு இரண்டு யூரோக்கள் வசூலிக்கிறார்கள் என்ன கொடுமை சார் இது..!?  இத தட்டிக்கேட்க ஆளில்லையா..?இதற்காகவே  வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரீஸ் மேயர் பெர்தொன் து நோயே சார்ந்திருக்கும் பார்டி சோசியால் கட்சிக்கு வோட்டு போடுவதில்லை என என்ர அப்புச்சி போட்டோ மேல் சத்தியம் செய்திருக்கிறேன்..??

பின்ன என்னப்பு இரண்டு மணித்தியாலங்கள் மாட்டு வண்டிய நிப்பாட்டியதற்கே நாலு யூரோக்கள் காலி  சம்பளம் வாங்கியதிலிருந்து பத்து நாளைக்கு இதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை இந்த காட்டான்..!!?(அதுக்கு பிறகு வரவு எட்டணா செலவு பத்தணாதான்..!?)ஆனால் அதை விட இந்த காட்டானுக்கே ஆட்டையை போட்டு விட்டார்கள் நம்மவர் நம்மவர் என்று கூவிகொண்டு திரியும் நம்மவர்கள்..?? ஆமாயா கடைகளில் சாமான்கள் வாங்கும் போது மிக கவனமாய் இருங்கோ மாப்பிளங்க... இவர்கள் எல்லா மரகறிகளுக்கும் ஒரே விலையை ஏன் அடிக்கிறார்கள்..? அதுவும் ஒரே சாமான்களை இரண்டுதரம் அடிக்கிறார்கள்..!  நான் கேட்கிறேன் இந்த காட்டானாலேயே ஒரு பதிவை தமிழில் போட முடியுமெண்டால் உங்கள் பண பட்டறை இயந்திரத்தை ஏன் ஒவ்வோர் பொருட்களின் பெயர்களையும் தனி தனியாக அடிக்க முடியாது..?

ஆம் இவர்கள் ஆட்டையைபோட வேண்டுமென்றே முடிவெடுத்து விட்டே பட்டறையை தொடுகிறார்கள் போலும்?? இதல் இவர்களிடம் பணிபுரியும் புதிதாய் வந்தவர்களை நினைத்து பார்கவே பயமாக இருக்கிறது இவர்களை பார்கும்போது வேண்டாம்...!?உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்..!?எனது மகனுக்கு ரொட்டி(பரோட்டா)என்றால் உயிர் லாச்சப்பல் செல்லும் ஒவ்வொரு முறையும் அவனுக்கு இவற்றை வாங்கி கொடுக்காமல் வருவதில்லை வழமையாய் செல்லு சாப்பாட்டு கடைக்கே சென்றேன் அது கிழமைக்கொரு முதலாளி மாறும் கடபோலும்..? இரண்டு ரொட்டிக்கு இரண்டு யூரோக்களும் கொஞ்ச பருப்புக்கு இரண்டரை யூரோக்களும் எடுத்து எனை சிதம்பர சக்கரத்தை பேய் பார்தது போலாக்கிவிட்டார்கள்.

இதை விட இஞ்ச ஒரு கூத்து நடந்தது இலங்கை பொருட்களை புறக்கனிங்கோ புறக்கனியுங்கோவெண்டு நானும் இரண்டாண்டுகளாக இலங்கையிலிருந்து வரும் சோம பாணங்களை தொடுவதில்லை..? அட புறக்கனிக சொன்னவங்களே அத விக்கும்போது இந்த காட்டான் என்ன கேனையனா அவர்கள் கடயிலேயே அந்த சோம பாணத்த வாங்கிக்கொண்டு வரும்போதுதான் காட்டானின் ஆசை??நினைவுக்கு வந்தது அவர்களிடமே பாக்கு வெத்தலை சுண்னாம்பு வாங்கி போட்டுக்கொண்டு வெளியில் வந்து துப்புவதற்கு இடத்தை தேடினால் இந்த காட்டானே வெக்கபடுமளவு மரத்தை சுத்தி துப்போ துப்பென்று துப்பி வைத்துள்ளார்கள் இந்த காட்டானின் முன்னோடிகள்..இதோ காட்டான் சுத்தி சுத்தி துப்பிய இடம்..?

Friday 1 July 2011

களவும் கற்று மற....??


பாத்தீங்களா மாப்புங்களா..இதுதானப்பு நான் புதுசா வாங்கின கால இயந்திரம் என்ன யோசிக்கிறீங்க மாட்டு வண்டிய வைச்சிகினு காலன் கீலன்னு ரீலு விடுகிறேன்னு ஆமாயா இது நிசமாவே ஒரு கால இயந்திரம்தானய்யா இப்ப நாம போகப்போறது எனக்குள்ளார குந்தின்னுகிர கிராமத்து பொருதாரமேதை காட்டான் கந்தசாமியை கூட்டிக்கினு வரத்தான்

பொருளாதாரத்தைப் பற்றி இந்த கம்முனாட்டி கதைக்கப்போறான்னாலே எலி மூஞ்சியில சோத்தான் கைய வைக்க போறீங்களே...மாப்புக்களா இது நீங்க நினைக்கிற பொருளாதரமில்லங்க..! வாங்க.. வாங்க ..நேரிலேயே போய்பாப்பம்  குய்ங்.. குய்ங்..அட சக்கரத்த கொஞ்சம் வேகமா சுத்தீட்டன்போல.!

கொய்யா மக்கா உன்மையிலேயே ஏமாந்திட்டிங்களா..!? ஏதோ வந்திட்டிங்க அதுகாச்சும் ஒரு மொக்க பதிவ போடுவம் இந்த காட்டான் எப்பூடி தன் சிறுவயதில் பொருளாதார தேவைகளை தீர்தான் என சொல்லுறான் சிறுவயதில் உனக்கென்னடா பொருளாதார தேவை என்றுதானே கேட்கிறியல்  நீங்க மட்டும் என்ன சிறுவயதில் பல்லிமுட்டஇனிப்பு,புலுட்டோ,தோடம்பழஇனிப்பு, இப்பூடி சாப்பிட்டிருப்பிங்கதானே..!? அட நானும் அதுக்குத்தான் காச எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடம் செல்வது இத சில பெருசுகள் களவெடுக்கிறனாம்..!!

அட நான் கேட்கிறேன் இத களவெண்டே வைத்துக்கோ நான் காச எடுத்து நாளு நாளாச்சு நல்லா கல்பனுசு,வறுத்த விசுக்கோத்து இப்பூடி சாப்பிட்டத கண்டு பிடிக்க வக்கில்ல உங்களுக்கு ஏதோ சித்தப்பு வாங்கி தந்த சோடா சேட்டுல பட்டுட்டு அதவைச்சு கண்டு பிடிக்கிறீங்களே உங்களுக்கு வெக்கமா இல்ல.!!?எனக்கு அது இல்லையப்பு...இது ஒரு திறம மாட்டாம ஆட்டையைப் போடுவது எப்பூடி அட அப்பூடி மாட்டினாலும் தப்புவது எப்பூடி..? அததான் சொல்லப்போறான் இந்த காட்டான்..

மாப்புங்களா  ஒருத்தரிடமே தொடர்ந்து ஆட்டையை போடாதீர்கள் பின்னர் அவர்கள் எதைத் தொலைத்தாலு முதலாவதாய் வந்து நிற்பது உங்கமுன்னால!?அதன்பின் தொழிலுக்கு தொங்கு திசைதான் ??

முதலில் அம்மாவிடம் இருக்கும் சில்லரைகளை ஆட்டை போடுவதற்கு முன்னர் கவனிக்க வேண்டியவைகள் அம்மா வெளியூர் சென்று வந்தாரா..!?ஆமெனில் இதை விட சிறந்த சந்தர்பம் வேறேதுவுமில்லை கடைக்காரர்களும் பஸ் கண்டக்டர்களும் கொடுக்கும் சில்லரைகள் பர்ஸ்சுக்குள் நிறைமாத கர்பிணிபோலிருக்கும்..! இதை அம்மா கணக்கு பார்க முன்னர் ஆட்டையை போட வேண்டும் ஏனெனில் சில்லரைகள் குறைந்தாலும் எங்களை சந்தேகப்படாது கடைக்காரர்களையும் கண்டக்டர்களையும் திட்டித்தீர்பார்..!அப்பொழுது நீங்கள் பால் மணம் மாறா பச்சபுள்ளபோல் மூஞ்சிய வைத்திருத்தல் அவசியம்..!?

அட இவ்வளவு கஸ்ரப்பட்டு எடுத்தாலு சில வேளைகளில் எமது துரோகிகள் காட்டிக் கொடுத்தால்? (அட  வீட்டுக்கதான் இருப்பாங்க வேற எங்கேயுமில்ல..!?)இப்ப அம்மான்னா சுமா இல்லேடாவென பிரப்புடன் வருகிறாவா? அமைதி ஓடாதே ஓடினால் அண்ணனோ அக்காவோ பிடித்து கொடுப்பார்கள் அதன் பின்னர் வரும் பூசை பலமானதாய்விடும் சாத்தியம் அதிகம் இப்ப நீ செய்யவேண்டியது இதுதான் பிரம்புடன் சேர்த்து அம்மாவை இறுக்க அனைத்துக்கொள்ளுங்கள் ராசா என்னை விட்டுடு என்று சொல்லும் வரை இப்போது வலது காலை மெதுவாக பின்நகர்த்துங்கள் விடு யுட் ஆனாலும் ஒரு அடி பலமானதாய் முதுகில் விழும் அரசியல்ல இதல்லாம் சகசமப்பு...!

அடுத்து நாம ஆட்டையை போடப்போவது அக்காவிடம் அக்காக்கள் இல்லாதவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதபங்கள் அக்காக்கள் இன்னுமொரு அம்மாக்களே...!?அதற்காக ஆட்டையை போடாதீர்கள் என்று சொல்லவரவில்லை அம்மாவிடமே ஆட்டையை போடும் நாங்க அக்காவிடம் ஆட்டையை போடாவிட்டால் எங்க பாசத்த நிறுபிக்க முடியாது..?இவ் விசயத்தில் நீங்கள் மிக மிக அவதானமாக இருத்தல் அவசியம்..? சரி அக்காவிடம்தானே பர்ஸ் இல்லையே புதையல் எங்கிருக்கும்?அட அனுபவசாலிகளுக்கு இதெல்லாம் ஒரு யுபி யுபி அட அந்த புதயலே அக்காவின் கொம்பாஸ்தான் என்ன என்ன மாப்புங்களா உடனே கொம்பாசை நோக்கி ஓடுகிறீங்க...!?பொரும பொரும கொம்பாச திறக்கமுன் கவனிக்க வேண்டியது அது எந்த திசையில் இருந்தது திறந்தவுடன் மயிலிறகு எப்படி இருந்தது ஆக்கு,ரப்பர் போன்றவை எங்கிருந்தது போன்றவை அவசியம் இதில் ஒரு பொருளை இடம் மாற்றி வைத்தால்..?சங்குதான் சிங்கங்களே..

அடுத்து நாம போற இடம் பாட்டிமார் ஆரம்பத்திலேயே சொல்கிறேன் இவர்களிடம் ஆட்டையை போடுவது சிரமமே..!இவரிடமிருக்கும் புதயல் உள்ளங்கை நெல்லிக்கனி வேற எங்க இருக்கும்? முந்தானை முடிச்சிலதான் ஆனால் இவர்களுக்கு நாம அடிக்கடி தேவைப்படுவோம் கடை தெருக்களுக்கு சென்று வர.. அப்போது வெற்றிலை,பாக்கின் விலையில் விளையாடலாம் விதவிதமாக..!?அத்தோடு கோவில் திருவிழாக்களில் பக்தி மயமாக பாட்டியுடன் கோவிலை சுத்திவந்தால் சுண்டலுடன் முந்தானை முடிச்சும் உங்களுக்கே..!!

அடுத்து நாம போறது தாத்தாமார்கள் எனக்கு தெரிந்து இவர்களிடம்தான் ஆட்டையை போடுவது சுலபம்..? மாமாக்கள்,சித்தப்புக்கள் மாதாமாதம் பாட்டிமார்க்ளுக்கு கைச்செலவுக்கு காசை கொடுப்பார்கள் அப்படியே பாட்டிமார்களுக்கு தெரியாமல் தவறனை செலவுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை அழுவார்கள் இதுதான் எங்களுக்கு பொன் முட்டையிடும் வாத்து இதை ஒரே போடாக போடாமல் முட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு வரவேண்டும்(கொஞ்சம் கொஞ்சமாக)ஒரு கட்டத்தில் தாத்தாவுக்கு சந்தேகம் வந்து விட்டால்?இடத்தை மாற்றி விடுவார் அதை கண்டு பிடிப்பது ஒன்றும் சிதம்பர ரகசியமில்லை..!இப்ப நீங்க மாலை வகுப்புகள்  முடித்து வருகிறீர்கள் தாத்தாவும் குட்டித் தூக்கம் போட்டு பாட்டி குடுத்த ஆட்டுப்பால் கோப்பிய ருசித்துக்கொண்டு இருக்கிரார் இப்ப பாட்டிய தேடாதீங்கோ அவங்க கோப்பிய குடுத்த கையோட பக்கத்து வீட்டு பரமாச்சியோட அரட்டையரங்கத்தில இருக்கா..!

இஞ்சதான் நீங்க கவணமாய் காய் நகர்த்த வேண்டும் பக்கதில் ஏதாவது மறைவில் ஒளித்துக் கொள்ளுங்க தாத்தாவின் கோப்பி பேனி வாயிலே கண்ணு முகட்டிலேயா கவலையே வேண்டாம் புதையலை நெருங்கி விட்டோம் எதற்கும் தவரனைக்கு காசு எடுக்க முகட்டில் கை வைக்கும்போது உறுதிப்படுத்திகொள்க..!இதில ஒரு நல்ல விசயம் என்னவெனில் நாங்கதான் முட்டையை பொறுக்குகிறோம்மென தாத்தாவுக்கு தெரிந்தாலும் அவர் நிலமை  திருடனுக்கு தேள் கொட்டியதுதான்..?

இதில சிறு சிக்கல் என்னவெண்டால் இந்த தாத்தாக்கள் அடுத்த முறை தங்கள் பிள்ளைகள் வரும்போது ரகசியமாய் போட்டு கொடுப்பார்கள் அவர்களும் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாததால ..!டேய் போய் பள்ளிகூட புத்தகத்தை கொண்டுவாடா என்பார்கள் இதுக்கு பிறகுதான் இருக்கு மாப்பிள ஆப்பு கோழி முதல் வந்ததா முட்ட முதல் வந்ததா?? போன்ற அறிவுபூர்வமான கேள்விகள் கேட்டு ஆப்படிப்பார்கள் இங்கு பாட்டிமார் இருந்தால் தப்பித்தோம் இல்லையென்றால் குத்துங்க எசமான் குத்துங்கதான்..!

இதெல்லாம் கானாட்டி நம்ம நண்பன் பக்கத்து கடை பாலு கல்லாபெட்டியில் இருக்கும் போது போய் அஞ்சு ரூபா கொடுத்து இனிப்பு வாங்குங்க அக்கம் பக்கம் பாத்திட்டு அம்பது ரூபா மிச்சம் தருவான் பாதி உங்களுக்கே..!! மீதிய பள்ளிகூடத்தில அவனிட்ட  கொடுத்தா கணக்கு தீர்ந்து போச்சு..!?(நாணயம் முக்கியம்)இதுதாங்க கஸ்டபடாம ஆட்டைய போடுறது??அரசியலில் இதெல்லாம் சகசமப்பு..!

அடுத்து நாங்க போக போற இடம் தம்பி அல்லது தங்கச்சியிடம் மாப்பிளங்களா பொரும பொரும இஞ்சயெல்லாம் ஆட்டய போடாதீங்க.. இவங்க எங்கள் எதிர் கால அன்னங்கள் இவர்களில் வகுப்பு தோழிகளில் ஒருவர் எங்கள் வருங்கால தமயந்தியாகலாம்??ஆகையால் மற்றவர்களிடம் ஆட்டையை போடும் காசில் இவர்களையும் கவனித்து வைத்திருத்தல் அவசியம்..!

அது சரி இதல்லாம் உன் சொந்த அனுபவமான்னா கேக்கிறீங்க..?ஐய்யோ மாப்புங்களா எனக்கு தொண்ட கட்டிப்போச்சு காதும் சரியா கேக்குதில்லீங்க ...!!கருத்துக்களில் போட்டு தாக்குங்க இந்த உடம்பு எவ்வளவோ தாங்கினது இதையும் தாங்கும்?குத்துங்க எசமான் குத்துங்க..!!?