இப்ப நீங்க புலக்கு புலக்கென்று அலையிரதால ஆச்சிய அடிக்கடி நினைக்கிறீங்க.. என்னையும் பிள்ளைகளை மறந்துபோறீங்க என்கிறாள் சினுங்கிக்கொண்டே என்ர மனிசி ஆச்சிய பற்றி யார் தவறா கதைத்தாலும் எனக்கு கெட்ட கோவம்தான் வருகிறது அதுவும் என்ற மனிசிய கோழி அமுக்கிற மாதிரி அமுக்கித்தானே ஆச்சி கூட்டியந்தவா இந்த காட்டானுக்காக..!! அதனால ஆச்சிமேல இவளுக்கு ஒரு இனம்புரியாத ஒரு கடுப்பிருக்கிறது..!!?
இதுக்கு மேல கதைத்து தும்புக்கட்டைய ஏன் உடைய வைப்பான்னு காட்டானும் இடத்தை காலி பண்னிட்டான்..! இப்பவெல்லாம் காட்டான் பிரச்சனை முத்தபோகுதென்றா இடத்தை காலி பண்னிடுவான் வர வர காட்டானின் உடம்பில் தாங்கும் சக்தி குறைந்ததுகொண்டு வருகிறது..!?
கோழி என்று சொல்லேக்க எனக்கு அக்கா ஞாபகம்தான் வருது.. நம்ம கிராமத்து வீட்டில கோழி வளக்கிறதெல்லாம் அக்காதான் ஆனா அக்கா கோழிக்கறி சாப்பிட மாட்டா... முட்டையெண்டா வெளுத்து வாங்குவா எங்களுக்கு கோழி சமைத்தால் அக்காவிற்கு இரண்டு முட்டைகள் கட்டாயம் அவித்து வைப்பார்கள்..
அக்காவிற்கு கோழிய அப்புச்சிதான் தவறனையில வாரவங்களோட கதைத்து மலிவா வாங்கி வந்து கொடுப்பார்.. தனிமரம் அடிக்கடி சொல்லுவாரே சகோதர மொழி சகோதர மொழியெண்டு அத பேசுறவங்கதான் அப்புச்சியிண்ட கைய முறிச்சு நீ வீட்டோட மாப்பிளையா போன்னு அனுப்பி வைச்சாங்களாம் இது நான் பிறக்க முன்னம் நடந்த கலவரம்..!?அப்புச்சி அடிக்கடி சொல்லுவார் கைய தடவியபடியே.. ஆனா அப்புச்சி ஒற்ற கையாலேயே சுருட்ட சுத்துரதென்ன மம்பட்டிய பிடிக்குறதென்னன்னு எல்லா வேலையும் செய்வார்..
வீட்டில கோழி சமைக்கிறது வலுகுறைவு ஒன்றில் கோழிக்கு வருத்தம் வந்து ஒரு கோழி சாகோனும்..!? இல்லாட்டி தீபாவளி வரனும் அதுவும் இல்லேன்னா நெருங்கிய சொந்தங்கள் கல்யாணம் செய்து விருந்திற்கு அவர்களை கூப்பிட வேண்டும்..?
என்ன இருந்தாலும் சமைக்க கோழிய பிடித்தா அக்காவிற்கு வைச்சது வைச்சபடி ஐம்பது ரூவா கொடுக்கோனும் நானும் உந்தகாச ஆட்டைய போட தேடி களைத்துபோனதுதான் மிச்சம் இண்டைக்கு வரை அந்த காச எங்க வைத்திருந்தாலெண்டு நான் கண்டு பிடிக்கவில்ல காட்டாண்ட தொழில்ல நேர்ந்த பெரிய அவமானம் அதுதான்....!!?
அப்புச்சி 1,2, மாதகுஞ்சுகளா கொண்டு வந்து கொடுக்கேக்க அக்கா மூஞ்சிய பாக்கோனும்..!! ஓடிபோய் கயிறு கொண்டு வந்து குஞ்சுகள கட்டிவைப்பாள் இரண்டு மூன்று நாளைக்கு... அதுக்கு பிறகு குங்சுகள பிடித்து முதலில் அவற்றுக்கு அடுப்படிய காட்டி காட்ட போய் வீட்ட வா..?? காட்ட போய் வீட்ட வா..?? என்றபடியே வீட்டையும் சுத்தி காட்டுவா ஆமாய்யா அப்பதான் அதுகளுக்கு வீடு பழக்கமாகுமாம்..?
இத எல்லாம் நாங்க பார்துகொண்டிருப்போம் இன்னும் எவ்வளவு நாள்ள தீபாவளி வருதெண்டு யோசித்தபடியே...! வாங்கி வந்த கோழிகளில் சேவல்கள் அதிகமானால் கோவில் திருவிழா முடிந்தவுடன் அவற்றிக்கு சங்குதான்..!!
வளர்ந்த சேவல்களை பிடிப்பதே ஒரு கலை இரவில் வேப்ப மரத்தில் தூங்கும்போது வெளிச்சத்த கண்னுக்கடித்து பிடிக்கோனும் இதில பிசகினா காலையில காட்டான் சேவலுக்கு பின்னால் ஒடுவத வைத்தே இண்டைக்கு வீட்டில என்ன கறியெண்டு கண்டு பிடித்துவிடுவார்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள்..
ஆனா ஆச்சி இருந்தபடியே சேவலை பிடிப்பா.. கொஞ்ச அரிசிய வாசல்ல இருந்து வீட்டு அறைவரை போடுவா கோழிகள் அவற்றை தின்றபடியே அறைக்குள் நுழைவினம் மெல்ல கதவை சாத்தியபடியே காட்டான் இஞ்ச ஓடிவாடான்னா கறிச்சேவல் காட்டான் கையில..! பிறகென்ன பின்வளவில இருக்கிற பூவரச மரத்துக்கு கீழ கிடங்க வெட்டுறதுதான்.. (தனிமரம் இப்ப தெரியுதா பூவரசம் பூவ கோயிலுக்கு ஏன் எடுப்பதில்லைன்னு..!?) மேல்கொப்பில தூக்குகயிறு ரெடியாக்கினா.. ஆச்சி வருவா கோழியின் கால்களை ஒரு கையாலும் செட்டைகளை மறு கையாலும் பிடித்தபடியே காட்டான் ரெடியாவான் கோழியுரிக்க..! கோழியோட வந்த ஆச்சி பக்கத்தில உள்ள பனைமரத்த பார்பா...!!? இஞ்ச காட்டான் கட் பண்னுறான் கொலைக்காட்சிகளை சென்சார் அனுமதிக்காதாம் ..?
பிரான்ஸ் வந்து சப்பிட்ட கோழியெல்லாம் பல்லில்லாதவங்களுக்குகாக வளர்கிறாங்களோ என்று என்னை சதேகபடவைக்கிதுது ஆமாய்யா கோழி இறைச்சியெண்டா புளியங்கொட்ட சப்புற மாதிரி இருக்கோனும்...!
இப்பிடியே போனா காட்டானின் நாக்கு செத்துடும்ன்னு காட்டானுக்கு பயம் வந்திட்டு அப்பதான் காட்டானுக்கு பழம் பெரும் பெருச்சாலி ஒன்று அறிமுகமாச்சு இஞ்சேயும் ஊர்கோழி இருக்கடா என்னட்ட மாட்டு வண்டியில்லேடா நீ வண்டிய கொண்டு வந்தா நான் அந்த இடத்த காட்டுறேண்டான்னு பேரம் பேசியது ...!?
காட்டானுக்கு சொர்கமே திரும்பி வந்த மாதிரிபோச்சு...!! அண்டைக்கு காட்டான் தொடங்கினான் வேட்டய இன்று வரை நிக்கவில்லை .. காட்டானுக்கு அங்க போறதெண்டா ஒரு சுகம் வாருங்கோ எங்கட ஊர் வயல் வெளிகள் மாதிரியிருக்கு உத கடந்துதான் காட்டான் போவான்..!
இந்த மிசினில சுடுதண்ணி கொதிக்குது இஞ்ச கரண்டுல ஒரு சின்ன மிசினிருக்கு ...ஆச்சி பனையில செய்கிற வேலைய இந்த பட்டன்னு செய்யும் அதுக்கு பிறகு இந்த சுடுதண்ணிக்குள்ளார கொஞ்ச நேரம் விட்டுட்டு பக்கத்தில உள்ள மிசினில விட்டா செட்டைய எடுத்து தரும்
ஆனா காட்டான் சுடு தண்ணிக்க போட விடமாட்டான் ..!? வேட்டிய மடிச்சு கட்டிற்று வேலைய தொடங்கினான்னா பத்து நிமிசத்தில முடிச்சிடுவான் வேலைய என்ன மாபிளங்கா காட்டான் எப்பிடி கோழிய உரிச்சான்னு பாக்கபோறீங்களா உந்த வேலை நம்மட்ட வேகாது பாரீஸ் பொலிசில கம்பி எண்ண காட்டான் என்ன ......!?ஆ
ஊரில ஒரு சொல்வட இருக்கு அவள தொடுவானேன்.. கவலைப்படுவானேன்னு..? அதபோல உங்களுக்கு கோழி உரிப்ப காட்டுறன்னு .. கோழிய வாங்கிட்டான் இந்த காட்டான்..! இத வீட்டில கொண்டுபோனா மனிசி சொல்லும் நீயே கறி குழம்ப வையன்னு சரி மாப்பிளங்கா.. வந்தது வந்திட்டீங்க கறி எப்படி இருக்கென்று பாத்திட்டு போங்க..!!?
அடுத்தது எலுப்புகள போட்டு தண்ணீர் சேர்த்து குளம்பா வைப்பான்... இது இரவு சாப்பாட்டுக்கு அதாவது புட்டு அல்லது இடியப்பத்திற்கு நல்லது இத எப்படி சமைக்கிறதென்று கேட்கிறீங்களா ...!?மாப்பிளங்கா ஒரு ஆண் சமைக்க தெரியாதெண்டா எப்படியப்பு நீங்கள்லாம் இந்த காலத்தில கன்னாலம் கட்டி குடும்பம் நடத்த போறீங்க ஓடிப்போய் சமையல பற்றி அப்பாவிடம் கேட்டுக்கொண்டு வாங்க....!!!?