முகப்பு

Tuesday, 23 August 2011

நம்மவர்கள்......

வணக்கமுங்கோ............

இப்பிடித்தாங்கோ ஒரு நாள் ஊரில என்ர சிவலயயோட வீட்ட போகேக்க அங்க அப்புச்சி தலைமையில அவசர அமைச்சரவை கூட்டம் நடந்துகிட்டிருந்தது.. அதில அடிக்கடி காட்டான்னு என்ர பேர சொல்லேக்க எனக்கு விளங்கீற்று இண்டைக்கு என்னைப்பற்றித்தான் முக்கிய மந்திராலோசனை நடக்குதெண்டு..

இதில வேற எனக்கு உள்ளூர ஒரு பயம் விளம்பரத்துக்கு எழுதி போட்ட மாதிரி எழுதி எல்லா பொம்புளபிள்ளைகளின் சைக்கிளிள் போட்டு வைச்ச கடிதங்கள யாராவது கொண்டு வந்து கொடுத்திட்டாங்களோன்னு...

அப்புறமா அப்புச்சி கூப்பிட்டார்.. என்னன்னு போனா என்னடா காட்டான் உன்ர சிவவல கந்தையண்ட காட்டுக்குள்ள மேய்சிட்டாம் நீ அப்ப என்னத்த புடுங்கிக்கொண்டு இருந்தான்னார்.. இப்பிடித்தாங்க என்ர சிவலயன் எப்பவும் என்னை மாட்டி விட்டுடுவான்..

இதில வேற காலையில கந்தையர் காட்டுப்பக்கமாதான் சிவலய ஓட்டிக்கொண்டு போகோனும் அவன மேயவிட.... நானும் என்ர யிம்மியும் சிவலய பிடிச்சுக்கொண்டு  கந்தயர் காட்டுப்பக்கம் போனா வடலீக்க செம்போட ஒதுங்கிற கந்தையர் முடிச்சது பாதி முடிக்காதது பாதின்னு ஓடிவருவார் தன்ர காட்ட மேயவிடுடுடவானோன்னு ஒரு பயத்தோட..

நாங்க ஒன்னும் சிவலய சும்மா கூட்டிற்று போறதில்லைங்கோ பழைய நீத்து பெட்டிய(புட்டு அவிக்க பனை ஓலையால் செய்த ஒரு கூம்பு வடிவிலான பாத்திரம்...!!??)அவன் வாயில கட்டித்தான் கொண்டுபோவோம் அவன் அதையும் சாப்பிட்டுவிட்டு கந்தையர் தோட்டத்திலேயும் கொஞ்சம் மேஞ்சிட்டான் அதுதான் இப்ப நடந்த அவசர கூட்டம்...

கந்தையர் வந்து கூச்சல் போட்டது அப்புச்சிக்கு கொஞ்சம் சூடாப்போச்சு சிவலயனயே மேய்க்க தெரியாத உனக்கு எதிர்கால வாழ்க்கை இஞ்ச சிரமம் உன்ன வெளிநாட்ட அனுப்ப போறம்ன்னு முடிவெடுத்திட்டோம்ன்னார்.. அப்புச்சியிட்ட இன்னோரு சான்ஸ் கேட்டேன்.. சிவலயனபோல பத்து பேர மேய்ப்பேன்னு உந்த கதையெல்லாம் வேண்டாம் இப்ப நான் சொல்லுறத செய்பாப்போம்ன்னு ஊற வைச்ச எள்ளு புண்ணாக்க நிறைய தண்ணி விட்டு தந்தார் இத உன்ர சிவலயன் முழுக்க குடிச்சா மேற்கொண்டு பேசுவோம்ன்னார்..

நானும் சிவலயனிட்ட அப்புச்சி தந்த புண்ணாக்க கொடுத்தேங்க.. அண்டைக்கு எனக்கு அடிச்சாங்க சிவலயன் ஆப்பு.. ஆமாங்க மூக்க புண்ணாக்கு தண்ணியில விட்டு சுழியோடி புண்ணாக்க மட்டும் சாப்பிட்டுட்டு தண்ணிய விட்டுட்டான்யா என்ர சிவலயன்....

அதுக்கு பிறகு அப்புச்சியிண்ட பேச்ச மீற முடியாமதாங்க நான் வெளிநாடு வந்தேனுங்க... என்ன அனுப்பேக்க மணியண்ணயிட்டதான் அனுப்போனும்ன்னு பிரான்சுக்கு அனுப்பி வச்சாங்க... பிரான்ஸ் வந்த முதல் நாள் மணியண்ண கேட்ட கேள்வி.. என்னடா காட்டான் உன்ர கோத்தைக்கும் கொப்பருக்கும் (அம்மா,அப்பா) அறிவு இருக்கோன்னு..

ஏன்னா நான் சின்ன புள்ளையாம் தனியா இப்பிடி அனுப்பக்கூடாதாம்.. அப்ப எனக்கு ஆகுலனை விட அரும்பு மீசை கூட இருந்திச்சு... அதவிட 18வயசு வேற... நானும் வந்தபோது இஞ்ச நாந்தான் வயதில குறைஞ்சவன்...

இப்ப நானும் பாக்கிறேன் 12,13 வயசி பொடியள தனியா அனுப்புறாங்க... அட மாடு மேச்ச காட்டானே இஞ்ச வரேக்க அவங்க வரக்கூடாதோன்னு நீங்க கேப்பீங்க.. யாரையா வரவேண்டாம்ன்னு சொல்லுறது ஆனா ஒண்ட மட்டும் யோசிச்சு பாருங்கோ இப்பிடி வருகிற பொடியங்கள அவங்க சொந்தக்காரங்க தன்ர பிள்ளைபோல நடத்துவார்களா..!!? அடுத்து வருகிற பொடியங்க கொஞ்சம் குழப்படியானவங்கன்னா இஞ்ச கண்டிச்சு வளர்க்க முடியுமோ..!!??

சில தாய்மார்கள் இப்பிடி வருகிற பொடியங்கள வீட்ட வித்து காணியவித்து அனுப்புறாங்க அங்க காச கொடுத்தவன் இறுக்கேக்க இவங்க இஞ்ச இருக்கிற சின்ன பொடியன இறுக்குவாங்க...!!!? அவங்க என்ன செய்வாங்க..? தொல்லை தாங்க முடியாம வயச கூட்டி விசாவ பதிவாங்க... விசாவும் கிடைச்சு வேலை செய்த முதல் மாச சம்பளத்தையும் பார்தா அவங்க என்ன செய்வாங்க.. அதுவும் எதையுமே செய்யும் சுதந்திரமுள்ள ஒரு நாட்டில..!!!??

தவறானபாதையில சிறுவர்கள போக விட்டுட்டு அங்க இருந்து குய்யோ முறையோன்னு கத்துறத்தில ஒரு பிரயோசனமும் இல்லீங்க.. ஒரு சிறுவன் தன்ர தாய் தகப்பனோட இருக்கிறதுக்கும் சொந்தக்காரன்னு சொல்லுறவங்களோட இருக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்..

ஒரு சிறுவனை அவன் வயதில் அனுபவிக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கவிடாது.. குருவி தலையில் பணங்காய வைக்கும் எங்கட ஆட்கள் சொல்லக்கூடாது எங்கட பொடியங்கள் வன்முறைப்பாதையில் செல்கிறாங்கன்னு... அதை சொல்ல இப்பிடியான சிறுவர்களை அனுப்பும் மனிதப்பேய்களுக்கு உரிமையில்லை..??

எனக்கும் தெரியும் இப்பிடி வரும் சிறுவர்கள் மட்டும்தான் இப்பிடி செய்கிறார்களா..? இங்கு பெற்றோர்கள் பிள்ளைகளை கவனிக்காது வேலை வேலைன்னு ஓடுபவர்களின் பிள்ளைகளில் சிலரும்  இப்படி இருக்கிறார்கள்தான் அதை நான் மறுக்கவில்லைத்தான்... ஆனால் இவர்களை கண்டிச்சு திருத்தக்கூடிய சூழலலில் இங்கு பெற்றோர் இருப்பதால் திருந்துவதற்கு ஓரளவு சாத்தியம் இருக்கின்றது... ஆனால் பெற்றோர்களே இல்லாமல் தனித்து இருக்கும் சிறுவர்களை யார்  மாற்றுப்பாதையில்அழைத்துச்செல்வது..?

இதெல்லாம் காட்டான் சொன்னா எடுபடப்போறதில்லைங்கோ... ஆனா இத எழுத காரணம் என்ன பாதிச்ச ஒரு சம்பவம்தாங்கோ..என்ர மணியண்ண எப்பிடின்னா ஊரில சொல்லுவாங்களே பக்கத்து இலைக்கு பருப்பு வேணுன்னு(தனக்கு இலையில் பருப்பு இல்லைன்னா சாப்பாடு பரிமாறுபவரை அழைத்து தம்பி பக்கத்து இலைக்கு பருப்பு இல்லைன்னு சொல்லுவாங்க அவரும் பருப்புச் சட்டியோடு வரும்போது  வந்தது வந்திட்டீங்க எனக்கும் போடுங்க என்பார்கள்..!!??) அதபோல என்னடா காட்டான் ஒருகிழமைதான் லீவெண்டு பரிசில நிக்கிறாய் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு லண்டன் பக்கம் போகலாமேன்னார்... நானும் பார்தன் இவருக்கு ஒரு சொந்தகாரன் லண்டனில இருக்கிறார்தானே ஓசியில ஓட்டுமடம் போகலாம்ன்னு...!!?  லீவ பிள்ளைகளோட இன்பச்சுற்றிலா சுத்தி வருவோமெண்டு மாட்டுவண்டிய எடுத்தா ஒரு உரவாக்கோட மணியண்ண வந்து நிக்கிறார்.. அட காட்டான் சின்னவங்களோட போகேக்க நீ கஷ்டப்படுவாய் அதுதான் நானும் உன்கூட வர்ரேன்னுட்டார்...!!??

இனி என்ன செய்ய முடியும் மாட்டு வண்டியில மணியண்ணையையும் கூட்டிக்கொண்டு லண்டனுக்கு போனா அங்க அவங்கள் மணியண்ணைக்கு நெரிங்கிய சொந்தமாம்.. மணியண்ணையின் மனிசியின் சகோதரியின் கணவரின் தாயின் அண்ணனின்.......... வேண்டாம் விட்டுடுறன் இப்பிடிபட்ட நெரிங்கிய சொந்தக்காரங்களின் வீட்டில் நான் கண்ட காட்சிதான்யா என்ர மனச குடைஞ்சு இந்த பதிவ எழுத தூண்டியது....!!

அந்த வீட்டில் ஒரு நாப்பது நாப்பத்தைந்து வயசு மதிக்கக்கூடியவர் ஒரு பத்து பதினொன்னு வயசு மதிக்கதக்க தன்ர மகளோடு வந்து இருக்கிறார்.. நமக்குதானே பேச்சுக்கு ஒரு ஆள்தேவை எல்லோரும் வேலை வேலைன்னு ஓடுறாங்க இவர் வந்து ஒரு மாசம் பேச்சுக்கு நடுவே நான் கேட்டேன் என்னங்க உங்க மனிசி இல்லையோன்னு அவரு சொல்லுறார்.. இஸ்பொன்சர் பண்ணி கூப்பிடுவம்ன்னு...!!?? எப்ப ..!!?? முதல்ல இவருக்கு விசா கிடைக்கோனும்.. அதுக்கு பிறகுதானே ஸ்பொன்சரப்பற்றி கதைக்கலாம்.. இஞ்ச எவ்வளவு பேருக்கு பத்து பதினைஞ்சு வருசமா விசா இல்லாம இருக்கிறாங்க...!!?

என்ர மனச குடையிற கேள்வி என்னான்னா பூப்படையும் வயசில இருக்கிற தாயின் ஆலோசனைகள் தேவைப்படுகிற ஒரு சிறுமியை இங்கு தாயில்லாமல் அழைத்து வரவேண்டிய தேவை என்னையா.. ஏன் இவர் மட்டும் தனியாய் வந்து மற்றவர்களைபோல் விசா கிடைத்தவுடன் குடும்பத்தையே அழைத்திருக்கலாமே..!? அந்த சிறுமி தான் நாட்டுக்கு அம்மாவிடம் செல்லப்போகிறேன் என்று அழும் காட்சி எனது மனச இன்னும் குடையுது..!!

நாளைக்கு நல்லதபோல ஒரு கெட்டது நடந்தா யாரையா பதில் சொல்லுறது..!? இந்த பச்ச புள்ளைய அனுப்பியதாய் ஒருகணம் நினைச்சுப்பாத்தாவா..
இதன் பாதிப்புக்களை... ?? வெளிநாட்டு மோகத்திற்கு ஒரு அளவே இல்லையாப்பா..??

எனக்கு இந்த முட்டாள் பெற்றோறை இப்பிடி எழுதி திட்டுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதுப்பா..நாங்க எங்க போறோமையா....!!??

நல்லா பாருங்கையா மணியண்ண இதுக்குள்ள தான்யா இருக்கிறார் வண்டிய கப்பலுக்கதானாம் ஏத்தோனும் லண்டன் போறத்துக்கு... இததான் பெரியவங்க சொல்லுவா ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறுமுன்னு....

Friday, 12 August 2011

மணியண்ணை...

வணக்கமுங்க நான் காட்டான் வந்திருக்கேங்க...நீங்ககெல்லாம் என்ர பதிவ வாசித்து கமண்டு போடுறத பாத்தோன காட்டானு கையுமோடல காலுமோடல.. ஒங்களுக்கெல்லாம் என்ர நன்றீங்க..

இண்டைக்கு ஏதாவது எழுதிபோட்டுட்டு ஊரில கோழிக்கு அடவைச்சிட்டு மணித்தியாலத்துக்கொருக்கா கோழிய தூக்கி முட்டயெல்லாம் பொரிச்சிட்டோன்னு பாக்கிற சின்ன வயது காட்டானபோல நானும் இனி கருத்து பெட்டிய உந்த எலிமூச்சில கையவைச்சு தட்டித்தட்டி பாக்க போறேனுங்க....

இண்டைக்கு என்னத்த எழுதலாம் என்னு யோசிக்கேக்க..என்ர தங்கச்சி டெலிபோன எடுத்து என்னண்ண அக்காவ பற்றி மட்டும் எழுதுறாய் நானும் பிரான்சிலதானே இருக்கிறன் நீ சொன்னமாதுரி உன்ர வலைப்பதிவுக்க அடிக்கடி போய் உனக்கும் பிரான்சில அதிக பார்வையார்கள் இருக்காங்கன்னு தோற்றத்த ஏற்படுத்துறேனேண்ண...?? அதுக்காச்சும் என்ன பற்றி நீ எழுதலாம்தாணேண்ணன்னு சொல்லுறாள்..

அட இவளபற்றி நான் என்னத்த எழுதவெண்டு பாக்கிறன்.. ஆமாங்க சின்ன வயசில நாங்க எந்த கும்மு கும்மினாலும் அத வாங்கிக்கொண்டு  எங்களுக்கு பின்னாலேயே சுத்துவாள்.. இவளிண்ட கையில காசும் இருக்காது ஆட்டைய போட... ஆனா எனக்கு நல்ல ஞாபகமிருக்கு... அப்ப நாங்க வீடு திருத்திகொண்டிருந்தோமுங்க ஒரு பத்து பதினைந்து வேலையாள்கள் வேலைசெய்து கொண்டிருந்தாங்க அம்மாவும் ஆச்சியும் அவசர வேலையா எங்கேயோ போட்டாங்க...
பின்னேரம் எல்லாருக்கும் கோப்பி கொடுக்கோனும்..

 நானும் சும்மா தங்கச்சியிட்ட சொன்னேன் இவங்களுக்கெல்லாம் கோப்பி போடம்மான்னு அவளும் ஓடிபோய் எல்லாருக்கும் கோப்பி போட்டுக்கொண்டு வாறா.. எங்கட வீட்டிலேயே குட்டியா ஒல்லியா இருப்பாள் அப்ப அவ்ள்... வேலைக்காரஙகளிக்கெல்லாம் ஒரே ஆச்சரியமா போச்சுங்க... அப்ப அஞ்சு வயசு பிள்ளையே வீட்டு வேலையெல்லாம் அழகா செய்யும்...

இப்ப காட்டானும் பாக்கிறன் இஞ்ச இருக்கிற பிள்ளையல..!!!?? ஒரு சுடுதண்ணிகூட போட கஸ்டப்படுகிறாங்க... பருப்புக்குள்ள தாளிக்க போடுற செத்தல் மிளகாய பார்த்தாவே ஒலகத்தில இருக்கிற எல்லா சண்டைப்பயிற்சியயும் ஒண்டா செய்யிற மாதிரி  ஆ..ஒ..ஐயோன்னு சவுண்டு விடுறாங்கய்யா...

அதுதானய்யா நானும் பயத்தோட பாக்கிறேன்... போனமாசம் மணியண்ணை என்னை கூப்பிட்டு டேய் காட்டான் என்ர பிள்ளைக்கு நீதானே பேரு வைச்சாய்ன்னார்.. ஆமாண்ண அதுக்கென்ன இப்போன்னா பேரு வைச்ச நீயே அவளுக்கு ஒரு நல்ல மாப்பிளையா பாத்து சொல்லுன்னார்..!!

அட பொண்ணுக்கு நல்ல பேருதான்யா வைச்சனான் யாழினின்னு ஆனா நீங்க அவளுக்கு நல்ல படிப்ப கொடுத்து கை நிறைய சம்பாதிக்கவும் வச்சிட்டீங்க இல்லைன்னேல...  கொஞ்சம் சமைக்கவும் பழக்கியிருக்கலாம்தானேன்னன்..

அட காட்டுப்பயலே அதுக்குதானேடா உன்ன கூப்பிட்டனான் உன்ன மாதிரி சமைக்க தெரிஞ்ச மாப்பிள கொண்டு வாடான்னார் அதுதான் இப்ப நல்ல ஒரு மாப்பிளய தேடிக்கொண்டு இருந்தேன்..

 வேலைக்கு போகேக்க அடிக்கடி ஒரு பொடியன பாக்கிறனான் நல்ல அழகா அம்சமா இருப்பான்.. சும்மா பேச்சு கொடுத்து பார்தேன் பிரான்சுக்கு வந்து ரெண்டு வருசமாச்சாம் விசா இல்லையெண்டும் கொமிசனில விசா கேட்டு மூன்றாவது ரீயப்பீல் பண்ணியிருக்கெண்டார் எண்டும் சொன்னார்..

நானும் ஒரு புது புரோக்கர் என்ற நினைப்பில அவரிட்ட கதைய விட்டுப்பார்தேன் கலியாணம் கட்டிட்டியோன்னு அவனும் இல்லையென்னு சொல்ல எனக்கு தலையில பல்பு எரிஞ்சுது..  இவனும் பிரன்சில இருக்கிறான் மணியண்ணைக்கும் புது மாப்பிளைய ஸ்பொன்சர் செய்யிர தொல்லையெல்லாம் இல்லைன்னு..!! விசாவோட கைநிறைய சம்பாதிக்கிற பொண்ணு இருக்கிறா விருப்பமெண்டா சொல்லப்புன்னு என்ர டெலிபோன நம்பர கொடுத்துட்டு வந்தன்.
அட அவனுக்கு என்ன அவசரமோ தெரியல வீட்ட போய் சேரேல்ல டெலிபோன் வருகுது அம்மாட்ட கதைச்சிட்டேண்ண அவாவும் ஓமெண்டுட்டாண்ண.. போட்டோவெல்லாம் பார்க்க தேவையில்லண்ண.. சம்பந்தத்த முடிச்சிடுவோமென்னான்... எனக்கு டக்கன்னு ஒரு சந்தேகம் என்னடா இவன் இப்பிடி அமளிப்படுகிறானே ஏதாவது வில்லங்கமாச்சென்னா என்ர மகளபோல இருக்கிற அந்த பிள்ளையின் வாழ்கை பாழாகக்கூடாதுன்னு சரி தம்பி அவங்கள நேரிலபோய் கதைச்சுப்போட்டு சொல்லுறேன்னுட்டு இவனைப்பற்றி ஒரு துப்பறியும் சிங்கமாய் தோண்டிப்பார்த்தேன் இவற்ற நண்பர்களோட கதைச்சுப்பார்த்தவரையிலும் நானும் தோண்டி துலாவின வரையிலும் பொடியன் பரவாயில்லன்னு ஒரு முடிவுக்கு வந்தேங்க..

மணியண்ணையிட்ட கதைச்சு பொடியண்ட ஜாதகத்தையும் வாங்கியந்து பொருத்தமும் பாத்தோமுங்க நல்ல பொருத்தம் கல்யாணம் செய்யலாம்ன்னு சாஸ்திரியும் சொல்லீட்டார் ஆனா பிள்ளைக்கு ஏதோ தோஸம்ன்னு ரெண்டு மாசத்துக்கு பிறகுதான் கல்யாணத்த வைக்கச்சொன்னாருங்க..

அடுத்த நாள் பொடியனோட கதைச்சு வீட்டில ஆராவது பெரியவங்க இருந்தா வெத்தில பாக்கு தட்டத்தோட வாடா பொண்ணு பார்த்து நடுமாறுவம்ன்னு சொல்லி அவனை எதிர்பார்த்து மணியண்ண வீட்டில நான் குடும்பதோட போய் நின்னா அவனும் பத்து பதினைஞ்சு பால்குடியலோட வாறார் வீட்டுக்கு..

மணியண்ண என்னை ஒரு மாதிரி பாக்கிறார்.. நானும் மணியண்ண காதில சொன்னேன் இப்ப இவங்கதானே பெரியவங்க உதையெல்லாம் கணக்கெடுக்காதீங்க தாலி கழுத்தில ஏறினோன பாருங்க இந்த தம்பிமார மாப்பிளைக்கு தெரியாதெண்டு என்ர அனுபவத்த சொன்னேனுங்க....  அவரும் சரிடா காட்டான்னு தட்ட மாத்திட்டார்...

இப்ப கொஞ்சக்காலமா ஐப்பசியில வார கல்யாண வீட்டிற்கு இப்பவே கோல் புக் பண்ணுறதில இருந்து சாப்பாடு வரைக்கும் என்ர தலையில விட்டுட்டார் மணியண்ண நேற்று வரைக்கும் உந்த விசயங்களுக்குதான் ஓடி திரிஞ்சேன் சந்தோசமா... அந்த மாப்பிள  டெலிபோன் எடுக்கும்வரை...!!!!????

டெலிபோன எடுத்த அந்த மாப்பிள வாயில முட்டய வச்சிருக்கிற மாதிரி சொல்லுரார்.. அண்ண எனக்கு நேற்று விசா ஓகே பண்ணி கடிதம் வந்திருக்கென்றான்.. பாத்தியோடா அந்த பிள்ளையிண்ட ராசி உனக்கு விசா கிடைச்சிருக்கென்னேன்.. அவனோ அனுங்கிக்கொண்டு சொல்லுறான்.. அம்மாவுக்கு இந்த கல்யாணத்தில இஸ்டமில்ல நானும்அம்மா சொல்ல மீறி ஒண்டும் செய்ய முடியாதெண்டுறான்... எனக்கு வந்த ஆத்திரத்துக்கு நல்ல சுத்த தமிழ்ல நாலு விட்டன் அவனோ டெலிபோன கட்பண்ணிட்டு போட்டான்...

அட இந்த நாய்தான் இப்பிடி சொல்லுதெண்டா.. அவன் அம்மாவுக்கு எங்க போச்சு புத்தி.. இவனுக்கும் ரெண்டு சகோதரிகள் இருக்கினம்தானே அவைக்கு இந்த நாய் செய்ததுபோல யாராவது செய்தா ஓமெண்டு விடுவானோ இந்த நாய்..!!!?

வீட்ட வந்து மணியண்ணைக்கு டெலிபோன எடுக்கிறன் கையெல்லா நடுங்குது.. விசயத்த மணியண்ணையிட்ட சொன்னா அப்புறம்ன்னு சுவாரசியமா கத கேக்குற மாதிரி கேக்கிறார்.. என்ன அண்ண இப்பிடி இருக்கிறீங்கன்னா.. டேய் காட்டான் இண்டைக்கு விசா கிடைச்சோன பேசி முடிச்ச கல்யாணத்தையே வேண்டாம்ன்னு சொல்லுறவன் நாளைக்கு கல்யாணம் கட்டினா என்னவெல்லாம் செய்வான்னு யோசிச்சுப் பாரடான்னுரார்...!!!? மணியண்ண என்னோட கோவபடலைன்றதே சந்தோசம்தான் ஆனா இந்த மாப்பிளையின்ர மண்டேக்க என்ன இருக்கென்று யோசித்து பாக்குறன்...

ஆரம்பத்தில கலியானத்துக்கு செக்கு மாடு மாதிரி காட்டான சுத்தி வந்தவன்.. விசா கிடைச்சோன பாத்திருப்பான் படிச்சு வேலைக்கு போற பிள்ளை இந்த நாட்ட நல்லா தெரிஞ்ச பிள்ள பாச ஒரு பிரச்சன இல்லாத பிள்ள இவள கட்டினா தான் வீட்டில பெரிய பிஸ்தான்னு காட்ட முடியாதுன்னு யோசிட்டான் போல.. இவனுக்கு தேவையெல்லாம் ஒரு பிள்ள பெத்து போடுற,வீட்ட சுத்தம் செய்யுற,சாப்பாடு சமைச்சு போடுற,உடல் பசிய தீர்கிற ஒரு இயந்திரம்... அது எங்க இருக்கென்னு யாராவது சொன்னா புண்ணியமாபோகும்... அத வாங்கி இந்த நாயிட்ட குடுத்திட்டா ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாகாதையா...!!?


 பின்குறிப்பு:- எல்லோரும் மன்னிச்சிடுங்க நாய்,பேய்ன்னு எழுதினத்துக்கு.. அடுத்து இது கற்பனைக் கதையில்ல.. காட்டான் உண்மையாகவே அனுபவித்த நிசமுங்கோ..  மணியண்ணயின் பேர மட்டும் இதற்கு பாவிச்சேன்.. அவர் என்ர குறியீடுதானே...!!??

பதிவுக்கு ஏற்ற மாதிரி அவரும் மாறுவாருங்கோ.!!!???  அப்ப மணியண்ண யார் என்கிறீர்களா.. அவர் நானாகவும் இருப்பார்..!!?? நீங்களாகவும் இருப்பார்..!!?? தானாகவும் இருப்பார்..!!? என்ர மணியண்ணை ஒரு மாயாவியுங்கோ..!!????

பாருங்கையா.. புலக்கு புலக்கென்னு திரிஞ்சதில காட்டான் தோட்டத்தை கவனிக்காம விட்டுட்டான்யா... காட்டான் புடுங்குற குழயெல்லாம் இஞ்ச இருந்து தானையா..!!!???

Wednesday, 3 August 2011

காட்டானும் பார்த்தானே..

கிருபானந்த வாரியார் ஒரு குட்டிக்கதை சொல்லுவார்.. சாகக்கிடக்கும் ஒரு தந்தை தன்னுடைய மகனை அழைத்து ஏதோ சொல்ல முற்படுகையில் இறந்து விடுவாராம்.. மகன் தந்தை என்ன சொல்லவந்தாரென்று தெரியாமல் அவர் கையில் இருக்கும் சுருட்டை பார்த்துவிட்டு எல்லாவற்றையும் சுருட்டுன்னு அர்த்தப்படுத்திக் கொண்டது போல் நானும் எதை எதையோ மாற்றி மாற்றி விளங்கிக்கொள்கிறேன்..!?

இன்று காலையில் வேலைக்கு செல்கையில் பிரான்சின் புகழ் பெற்ற France info ரேடியோவை கேட்டுக்கொண்டு செல்கையில் நானும் கிருபானந்தவாரியார் சொன்ன அந்த கதையில் வருகின்ற மகன் மாதிரித்தானோன்னு ஒரு சந்தேகம் வந்துவிட்டது..!?

அது ஒன்றுமில்லை ஐரோப்பாவிலேயே  கஞ்சா என்றழைக்கப்படும் கனபி பாவிப்போர் பிரான்சில்தானாம் அதிகம் இளைஞர்களில் 23%மானவர்கள் கனபி பாவிக்கிறார்களாம்..

ஐரோப்பாவில் எனக்கு தெரிந்து ஹாலாந்தில்தான் சட்ட பூர்வமாக கனபி பாவிக்கலாம்.. அங்கு காட்டானும் 95ம் ஆண்டுகளில் அடிக்கடி சென்று வந்ததால்தான் சொல்கிறேன்.. கனபி பாவிப்பதற்கல்ல..!!?? எனது பழைய நண்பரை பார்பதற்காக அந்த காலங்களில் அடிக்கடி செல்வதுண்டு வேறு ஒன்றுமில்லை நம்புங்கோ மாப்பிளைங்களா..!!?

இப்ப விசயத்திற்கு வாரன் மாப்பிள.. பிரான்சில் பசுமை கட்சி கனபி பாவிப்போர் மீது ஒருவித மென்மையான போக்கே கொண்டுள்ளது அக்கட்சியின் முன்னால் தலைவர் நோயல் மம்மேர் கனபியை சட்ட பூர்வமாக்க வேண்டும் என்கிறார்..!

இப்ப இவர் போற இடமெல்லாம் சின்னபொடியங்க ஐயா கனபி தாங்கையா கனபின்னு ரவுசு பண்ணுறானுங்கோ மாப்பிளையும் அசடு வழியுறார்.. ஆனா காட்டானுக்கு மாப்பிளைய பிடிக்கும் தப்பா நினைக்காதீங்க.. அவர் பகிரங்கமாகவே தான் ஹோமோ செக்ஸ்சுக்கு ஆதரவெண்டு சொன்னது மட்டுமல்லாது..  தன்னுடைய நகர சபையில் சட்டம் அங்கீகரிக்காது என்று தெரிந்தும் இரண்டு ஆம்பிளைகளுக்கு திருமணம் செய்து வைச்சிட்டு ஓவென்று கதறி அழுத காட்சிய பார்த்த காட்டானும் கண் கலங்கீட்டான்யா...!!??

அட இவர விடுவம் இவர் ஒரு முன்னால் காலநிலை செய்திவாசிப்பாளர் மழை வருமோ வராதோனுகூட சரியா சொல்லமுடியாத இவர் சொல்லுறத எல்லோரும் கேப்பினமா..!? ஆனா ரேடியோவில வந்து கனபிய பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறவர் ஒன்றும் காட்டானில்லை.. பிரான்சில் பிரபலமான sorbonne university பொருளாதார பேராசிரியர்.. இஞ்ச இருக்கிறவ காசோடதானே எல்லாத்தையும் பாப்பினம் இவர் சொல்கிறார் கனபியை அங்கீகரித்து அதை கடைகளில் விற்கவிட்டால் அரசுக்கு எவ்வளவோ மில்லியார் யூரோ வருமானம் வருமாம்...!?

அட காச பாக்கிற இவர்கள் எதிர்கால இளைஞர்களை யோசிக்கேல்ல நானும் ஆரம்பத்தில இஞ்ச இருக்கிற பொடியங்க சின்ன வெள்ள பேப்பரில சிக்கிரட்டு தூள வைச்சு சுருட்டேக்க பாத்திருக்கேன் என்ர அப்புச்சி சுருட்ட உறுட்டுற மாதிரி இவனுங்க இத உறுட்டுறாங்கன்னு..  அப்புறம் பார்த்தாதான் தெரியுது இவனுங்க கனபியதான் இப்பிடி செய்யுறாங்கன்னு..

கனபிய நிற்பாட்டுறதுக்கு வழிய பார்காம  அதை எதிர்காலத்தில் சட்டபூர்வமாக்கினால்..!!!?? சின்ன பொடியங்க கெடுவது மாத்திரமில்ல.. இனிப்பு வாங்க காச களவெடுத்த காட்டானைப்போல... இவர்கள் ரோட்டில் போற வர்ற ஆட்களை கொள்ளையடிக்க போகிறாங்க.. இப்பவே இது பரவலா இஞ்ச நடக்குது.. இனி இது தேசியமயமாகிடும்..!!?

இதில சோசலிசம்ன்னு கும்மியடிக்கிறவய நம்ப முடியாது..அதோட எங்கட தமிழ் பொடியங்க இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நல்லா படிச்சுக்கொண்டு வாராங்க.. இவங்க பெற்றோரில கூடுதலானவங்க காசு காசுன்னு ஓடுவதையும்தாண்டி...!!?

 இஞ்ச கனபி விக்கிறவங்க எங்கட ஊரில பள்ளிகூடத்துக்கு முன்னால நிக்கிற ஐஸ்பழகாரன் போல பள்ளி பிள்ளைகள குறிவைச்சுத்தான் திரியுராங்க ஏன்னா இவங்கதான் எதிர்கால கஸ்ரமர்ன்னுராங்க.. முதல்ல இவர்களின் நண்பர்கள் மூலம் இலவசமாதான் கொடுப்பாங்க.. அதுக்கு பிறகு இவர்கள் அதற்கு அடிமையாகிட்டா..கதை கந்தல்தான்..!!?

அதுக்கு பிறகு பிள்ளய அடிச்சோ பிடிச்சோ திருத்த முடியாது.. எப்பிடியோ நாட்ட விட்டு வெளிக்கிட்டவ திரும்பிப்போய் அங்கேயே இருப்பார்கள் எண்டுறது பொய்..!? இப்பிடிதான் மணியண்ணை நான் இஞ்ச வந்த ஆரம்ப நாட்கள்ல டேய் காட்டான் இன்னும் ரெண்டு வருசத்தில காச உழைச்சுக்கொண்டு ஊருக்கு போய் என்ர மனிசி பிள்ளைகளோட செட்டிலாகப்போறேன்னு என்னட்ட அடிக்கடி சொல்லுவார்.. இப்ப இருவது வருசமாச்சு கொழும்பில வீட்டையும் வாங்கி விட்டிருக்கார் ஆனா இப்ப அங்க போற ஐடியா இல்லன்னுறார் கேட்டா குடும்பத்தை இஞ்ச கூப்பிட்டாச்சு பிள்ளைகள் இஞ்ச படிக்கினம் அவர்களுக்கு ஒரு கல்யாணம் காட்சி பார்க்கவேண்டாமோன்னுரார்.. இன்னும் கொஞ்ச காலம் போனா பேரப்பிள்ளைகள் பள்ளிக்கூடம் போயினம் அவர்கள நாங்க பார்கோனும்பார்... அதையும் விட்டா பேரபிள்ளைங்க வளர்ந்திட்டார்கள்ன்னு சொல்லிக்கொண்டே போவார்... இது எல்லாருக்கும் ஒரு காலத்தில வாறதுதான்...


சரி காட்டான் இதுக்கு என்ன செய்யலாம்ன்னு நீங்க கேக்கலாம் முதல்ல ஒன்றை சொல்கிறேன்.. காட்டானுக்கு இதில பெரிய அனுபவமில்லன்னாலும்.. எனக்கு தெரிந்த சில வழிகள சொல்லுகிறேன்...  உங்களுக்கும் தெரியும் எப்படி எங்கட பிள்ளைகளை இதில இருந்து காப்பாத்துறதெண்டு அத நீங்க உங்க கருத்துக்களா சொல்லுங்கோ அது மற்றவர்ளுக்கு பிரயோசனமாஇருக்கும்...!!!!!

எப்பிடியோ இண்டைக்கில்லாட்டியும் ஒரு நாள் இவர்கள் கனபிய பிரான்சில சட்டபூர்வமாக்கிடுவாங்கன்னுதான் காட்டான் நினைக்கிறான்...!? இப்ப இவர்கள் நூல் விட்டு பாக்கினம்.. இப்பிடியான.. பேராசிரியர்கள்,அரசியல்வாதிகள் மூலம்.. அதுக்கு முன்னால நாங்க உசாராகிடோனும்..

தோளுக்கு மேல வளர்ந்தா தோழன்னு சொல்வதுபோல்..! நான் உன்ர அப்பண்டா அப்பிடிதாண்டா இருப்பேன் நான் சொல்லுறததாண்டா நீ கேக்கோனும்ன்னு இருக்காம.. அவர்களோடு நண்பர்களா,நண்பிகளா பழகுவோம்.. வாழ்க்கைக்கு காசு தேவைதான் அத இல்லைன்னு சொல்லல காட்டான்... ஆனா பிள்ளைகளுக்கும் கொஞ்ச நேரம் ஒதுக்குவோம்...  லீவு நாட்களில் பிள்ளைகளை அவர்களுக்கு விரும்பிய இடங்களுக்கு அழைத்து செல்வோம்.. முக்கியமாக அவர்களின் நண்பர்களை தெரிந்து கொண்டு அவர்களுடனும் நண்பர்களாக பழகுவோம்..

இப்படியான சில செயற்பாடுகள் மூலம் கட்டாயம் அவர்கள் எங்களிடம் எதையும் மறைக்க மாடார்கள்...!? இது அவர்களை நல்வழிப்படுத்தும்..காட்டானுக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது பிரன்சில் அடுலேசோன் என்று அழைக்கப்படும் டீனேச் பசங்களப்பற்றி..  உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.... காட்டானிடமும் வருங்கால டீனேச் பொடியங்கள் இருக்கிறார்கள்.. உங்கள் அனுபவம் எனக்கும் தேவை...!!!?