முகப்பு

Sunday 26 February 2012

ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காது....!!!!

வணக்கம்!
நீண்ண்ண்ண்ண்ட நாட்களின் பின்னர் எனது பிளாக்கை திறந்து பார்த்த பின்னர்தான் விளங்குது  2012  இல் ஒருபதிவுமே போடல என்று! ('ஆமா, நீ ஒவ்வொரு நாளும் பதிவு போடுற ஆள்தானே!' என்று கேட்பது காதில் விழுகிறது ..!! ஹி ஹி ) அப்பிடியெல்லாம் இல்லீங்க பதிவு போட்டாதான் பதிவராம்! அதுதான் எதாவது பதிவு போடலாம் என்று பார்த்தேன். :-) சரி நான் கேள்விப்பட்ட ஒரு கதைய சொல்லி நானும் ஒரு பதிவர்தான் என்று நிருபிக்கிறேன்..  


முன்னொரு காலத்தில (இப்பிடித்தான் ஆரம்பிக்கனுமாம்.) வாழ்ந்த அரசனிடம் ஒருவர் வேலை கேட்டு வந்தாராம். 'தனக்கு சம்பளமோ, சாப்பாடோ வேண்டாம் வேலை மட்டும் தந்தால் போதும்' என்று ஒரு கோரிக்கையை வைத்தார் அந்த மனிதர். அரசனுக்கு ஆச்சரியம் "அட! சாப்பாடும் வேண்டாம் சம்பளமும் வேண்டாம் என்கிறானே இப்பிடிப்பட்டவர்களால் அரசுக்கு எவ்வளவு லாபம்?'....மந்திரியாரே உடனே இவருக்கு வேலை கொடுங்கள்" என்று உத்தரவிட்டார் ..
மந்திரிக்கோ இவரின் நடத்தை மீது  சந்தேகம்! அதனால  இவரை ஏமாற்ற வேண்டும் என்றே ஒரு வேலையை தேர்தெடுத்தார்.  வேலை கேட்டு வந்த மனிதரிடம் "இன்று தொடக்கம் உன்னை அரசாங்க வேலைக்காரனாக ஏற்றுக்கொள்கிறோம்! இதோ உனது அரச முத்திரையுடன் கூடிய உடை, இன்று தொடக்கம் உனது வேலை எங்கள் நாட்டு கடற்கரையில் ஒரு நாளுக்கு எத்தனை அலைகள் வருகின்றது என்று கணக்கெடுப்பதே" என்றார்.
மகிழ்சியோடு வேலையை ஏற்ற அந்த மனிதரும் கடற்கரையை நோக்கி சென்றார். அங்கு அலைகளை எண்ண தொடங்கியவருக்கு நாட்டின் துறை முகங்களுக்கு வரும் கப்பல்கள் இடையூராக இருப்பதால் அவற்றை உள்ளே விட அனுமதிக்கவில்லை. தான் ஓர்    அரச ஊழியன் எனவும் கப்பல்களால் தனது கடமை பாதிப்படைவதாகவும் இதனால் அரச கட்டளைகளை தன்னால் நிறைவேற்ற முடியாது இருப்பதாகவும் கூறினார்.. இவரால் பதிக்கப்பட்ட கப்பல் முதலாளிகள் இவருக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை லஞ்சமாக கொடுத்து தங்கள் தொழிலை தொடர்ந்தார்கள். இதை அறிந்த மன்னருக்கு அப்போதுதான் விளங்கியது அவர் ஏன் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய முன்வந்தார் என்று.;-)
உடனடியாக அவரின் வேலையை மாற்ற அரசர் உத்தரவிட்டார். அவரின் புதிய வேலை என்னன்னா வணிக நிலையங்களிலும் தெருக்களிலும் இருக்கும் எலிகளை எண்ண வேண்டும் என்பதே.(ஆமா, அரசருக்கு ரெம்ப பெரிய தண்டனை கொடுத்ததா நினைப்பு..) நம்மாளு என்ன லேசுப்பட்டவரா? கடைமை வீரனாச்சே! காலையில்  கடைகள் திறக்க முன்னரே கடை வாசலில்  காத்திருப்பார்..  அங்கு இருக்கும் எலிகளை எண்ணுவதற்காக! காலையில் கடையை திறக்கும் முதலாளியிடம் தான் ஓர் அரச ஊழியன் எனவும் அங்கு காணப்படும் 500 மூட்டை அரிசிகளையும் நகர்த்தி அங்கு இருக்கும் எலிகளை எண்ண அனுமதிக்குமாறும் கேட்பார். பிறகென்ன அங்கும் தொடங்கும் லஞ்சம்.. ஹா ஹா இப்பிடிதாங்க சம்பளம் வேண்டாம் என்று வேலைக்கு வருபவர்கள்..!!
லஞ்சமும்  இப்படித்தானோ உருவாகின்றது?  அரசாங்க ஊழியன் என்றால் "கொம்பு" முளைத்தவர் என்ற எங்கள் நினைப்புதான் லஞ்சத்துக்கு வழி கோலுகின்றதோ? (ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று இதை தான் சொல்வார்களோ?)